பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————இரண்டாம் தொகுதி/உலகனுர் பஞ்சாயத்தில் ஒருமைப்பாட்டு விழா 🞸 955

மீட்டிங் கிளார்க் சிரித்துக் கொண்டார். ஸ்ர்க்குலர் தயாராயிற்று. அஜென்டா கீழ்க் கண்டவாறு அமைந்திருந்தது:-

1. டு அரேன்ஜ் நேஷனல் இண்டகரேஷன் ஸெமினார்.
2. ஸ்டிரீட் லைட் ஃபெஸிலிட்டீஸ்
3. பஞ்சாயத்து லைப்ரரீஸ்.

ஸ்ர்க்குலரில் கையெழுத்துப் போட்டு. “இன்னிக்கே எல்லாருக்கும் கையெழுத்துக்கு அனுப்பிச்சிடு”- என்று கூறினார் கமிஷனர் கண்ணாயிரம்.

ஸ்ர்க்குலர் கையெழுத்துக்குப் போயிற்று. சேர்மனும் வைஸ் சேர்மனும், மெம்பர்களும் ஒவ்வொரு காரணத்துக்காக ஒவ்வொரு கோபத்தை வைத்து முணு முணுத்துக் கொண்டே கையெழுத்துப்போட்டார்கள்.மீட்டிங் தினத்தன்று எல்லோருக்கும் காபி வழங்குவதா, பாதாம்கீர் வழங்குவதா என்பது பற்றி சேர்மனுக்கும் கமிஷனருக்கும் கூட்டம் தொடங்கும் முன் அரை மணி நேரம் காரசாரமாக விவாதம் நடந்தது. கடைசியில் பாதாம்கீரே வாங்கி வரப்பட்டது. மீட்டிங் தொடங்கியதும் கமிஷனர் சர்க்காரிடமிருந்து வந்திருந்த ஸர்க்குலரைப் படித்துவிட்டு அஜெண்டாவில் முதல் அயிட்டமான தேசிய ஒருமைப்பாட்டு விழாவைப் பற்றிக் கூறினார். உடனே சேர்மன் தமது கனத்த சரீரத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு எழுந்திருந்து.“ஒருமைப் பாட்டு விழாவைக் கொண்டாடணும்கிறதிலே எனக்கோ, உங்களுக்கோ அதிக ஆட்சேபணை இருக்க முடியாது. ஆனா, அதை எப்படிக் கொண்டாடனும்கிறதைத் தான் மெம்பர்ஸ் எல்லாம் இப்பச் சொல்லணும்.” என்றார்.

“மாஸ் ஸ்கேல்ல ஒரு பெரிய ஒருமைப்பாட்டு ஊர்வலம் நடத்தனும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’னு பெரிய பானர் ஒண்ணையும் வள்ளுவர் படத்தையும் ஊர்வலத்தில் முன்னாடிக் கொண்டுபோகணும்”- என்று திமுக உறுப்பினர் திருமாவளவன் உடனே எழுந்திருந்து தமது கருத்தைத் தெரிவித்தார்.

“சமதர்ம சமாதான சமுதாயத்திலே வர்க்கப் போராட்டத்திற்கு இடமே இருக்கக் கூடாது என்று லெனின் கூறியிருக்கிறார். ஊர்வலம் நடத்தும்போது அது நினைவிருக்க வேண்டும்” - என்றார் வலது கம்யூனிஸ்ட் உறுப்பினர் வாழ வந்தான். திடீரென்று சம்பந்தமில்லாமல் லெனினை இழுக்கவே இடது கம்யூனிஸ்ட் உறுப்பினருக்கே கோபம் வந்துவிட்டது. மீசையை அரிவாள் போல் முறுக்கிவிட்டுக் கொண்டு சுத்தியலால் அடிப்பது போல் வார்த்தைகளை விட்டார் அவர். “நண்பர்களுக்கு நானொன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். மாவோ சொன்னார் ஆயிரம் பூக்கள் மலர வேண்டுமென்று. அதிகாரம் துப்பாக்கிக் குழாயிலிருந்து பிறக்கிறது. தோழர் வாழ வந்தான் அநாவசியமாக இங்கு சித்தாந்தப் போராட்டத்தை எழுப்புகிறார். விளைவு விரும்பத் தகாததாக இருக்குமென்பதை மட்டும் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்” என்று சீறினார் இடது கம்யூனிஸ்ட் தோழர் இடிந்தகரை பாலகிருஷ்ணன். கடுங்கோபம் அடைந்த சுதந்திரா உறுப்பினர்,