159. சந்தேகங்களின் முடிவில்...
வியன்னா விமான நிலையத்தில், ஆளரவமற்று வெறிச்சோடிப் போன அந்த நள்ளிரவில் சந்தேகப்படத்தக்க சூழ்நிலையில், அந்த இளம் பெண் எனக்கு வற்புறுத்தி உதவ முன் வந்த போது, என்னுள் மகிழ்ச்சிக்குப் பதில் பயமும்-தற்காப்பு உணர்ச்சியுமே அதிகமாயின. ஹாம்பர்க்கிலும், பெர்லினிலும் என் நண்பன் பாஸ்டின் ராய்ஸ் எச்சரித்திருந்தது நினைவுக்கு வந்தது.
என்னுடைய கோட் பாக்கெட்டில் உள்பக்கமாகப் பத்திரமாயிருந்த ஆயிரத்து இருநூறு டாலர் ரொக்கத்தையும், ஐநூறு டாலர் மதிப்புள்ள டிராவலர்ஸ் செக்கையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பதற்றம் அதிகமாயிற்று. கேள்விப்பட்டிருந்த கதைகள், அனுபவங்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. வெளிநாட்டில்-கண்காணாத தேசத்தில் பணத்தை இழந்து நடுத் தெருவில் நிற்கும் பயங்கர அனுபவத்துக்கு ஆளாகி விடுவோமோ என்று பயமாகக் கூட இருந்தது.கோடைக் காலமாதலால், லண்டனிலும், பாரிஸிலும் போல வியன்னாவிலும் இரவு பத்து மணிக்குமேல்தான் இருட்டும் என்று ஜெனீவாவிலிருந்து புறப்படும் போது நினைத்திருந்தேன்.
என் துரதிர்ஷ்டம் மாலை ஆறு மணிக்கு மேல் ஜெனீவாவிலிருந்து வியன்னாவுக்கு நேரடியாக ஃபிளைட் எதுவும் இல்லை. ஜெனீவாவிலிருந்து ஜூரிச் வரை ஸ்விஸ் ஏர் ஃபிளைட் ஒன்று இருந்தது. அப்புறம் ஜூரிச் விமான நிலைய டிரான்ஸிட் லவுன்ஜில் இரண்டு மணி நேரம் காத்துக் கிடந்து, மறுபடி அங்கிருந்து ஆஸ்டிரியன் ஏர்வேஸ் ஃபிளைட் ஒன்றைப் பிடித்து வியன்னா போய்ச் சேர வேண்டிய மாதிரி, என் பயணத் திட்டம் அமைந்து விட்டிருந்தது. வேறு வழியில்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை வேறு!
வீக் எண்ட்- அதாவது, வார இறுதி விடுமுறை நாட்களில் அந்த நாட்டவர்களை வெளியே பார்ப்பது துர்லபம். தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கும் தெருவோரங்களிலும் வீட்டு முகப்புக்களிலும் வரிசையாகப் பார்க் செய்த கார்களைத் தவிரத் தெருக்களும், கடை வீதிகளும் ஆளரவமற்று மக்கள் காலி செய்து விட்டு ஓடின நகரம் மாதிரி இருக்கும்.
வியன்னாவில் விமானம் தரையிறங்கும் போதே இரவு ஒன்பது மணிக்கு மேலாகியிருந்தது. பாஸ்போர்ட் கண்ட்ரோல், கஸ்டம்ஸ் ஆகிய இடங்களில் ‘க்யூ’வில் நின்று முடித்துக் கொண்டு-எக்ஸ்சேஞ்ஜ் கவுண்டரில் மறுபடியும் வரிசையில் நின்று, தேவையான அளவு ஆஸ்ட்ரியன் ஷில்லிங்ஸ் மாற்றிக் கொண்டு வெளியே வந்த போது இரவு மணி பத்து. நன்றாக இருட்டி விட்டது.
மேற்கு ஜெர்மனியில் பத்துப் பேரில் ஐந்து பேர் ஆங்கிலத்தில் உரையாடக் கிடைப்பார்கள் என்றால், இங்கே ஆஸ்திரியாவில் பத்தில் ஒருவர் கூட ஆங்கிலம்