164, பொய் சொல்லத் தெரியாமல்…
அவனுக்கு ஒரு பாவமும் தெரியாது. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல அந்த நிகழ்ச்சி நடந்திருந்தது.கல்லூரி முழுவதும் அவனை ஆதரித்து, அவனுக்காகப் போராடக் கூடக் காத்திருந்தது. ஆனாலும், அந்த ஆதரவையும், அனுதாபத்தையும் ஏற்று வசதியாக அவற்றில் குளிர் காய அவனுக்கு மட்டும் விருப்பமில்லை.
அவனுக்கு - அதாவது, சுகுமாரன் என்கிற சுமனுக்குத் தன்னைத் தப்பச் செய்து கொள்ள வேண்டுமென்றோ, காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றோ கூட எண்ணமிருந்ததாகத் தெரியவில்லை. தனக்கு ஏற்பட்ட இரண்டு சோதனைகளிலும் அவன் அப்படித்தான் நடந்து கொண்டான். எப்படியாவது அதிலிருந்து தப்ப வேண்டும் என்ற முனைப்பை அவனிடம் காண முடியவில்லை. அவனைத் தப்புவித்து விட வேண்டும் என்று எண்ணியவர்களோடு, அவன் ஒரு சிறிதும் ஒத்துழைக்கவில்லை. அழகை இரசிக்கும், அமைதியை விரும்பும், செளந்தரிய உபாசகனாகிய அவன் கொலைகாரனாகவும், கலகப் பேர்வழியாகவும் சித்தரிக்கப்பட்ட போது கூட, அவற்றை மறுத்துத் தன்னை நிரபராதியாகக் காட்டிக் கொள்ள அவன் முனையவில்லை. முயலவில்லை.
‘எப்பப் பார்த்தாலும் சொப்பனத்திலே மூழ்கிக் கிடக்கிற மாதிரி இருப்பானே சுமன், அவனைப் பத்தியா இந்தக் கம்ப்ளெயின்ட்? நம்ப முடியவில்லையே?’
‘யாரு சுகுமாரனா? ஒரு ஈ எறும்பைக் கொல்லக் கூடப் பயப்படறவனாச்சே?
‘பேசறதுக்கே கூச்சப்படறவன், பொம்பிளைன்னாலே ஏறிட்டுப் பார்க்கறதுக்குக் கூட வெட்கப்படறவன். இதைச் செஞ்சிருப்பான்னே நம்ப முடியாது.'
'யார் கண்டாங்க? எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ? நம்ப முடியாதுப்பா' .
‘இவனா? இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா?’
இப்படி எல்லாம் பேசிக் கொண்டார்களே ஒழிய, ‘ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துக்கிட்டு இப்படிப் பண்ணிட்டானே?’ என்று யாரும் துணிந்து அவன் மீது குற்றம் சாட்டத் துணியவில்லை. விவரம் தெரிந்த எவரும் அவனைக் குற்றம் சாட்ட முன் வரவில்லை.
ஆனால், கல்லூரி முதல்வர், விடுதி வார்டன், கரஸ்பாண்டெண்ட் ஆகிய மூவர் அடங்கிய விசாரணைக் குழுவின் முன்னால் சுமன் விசாரணை செய்யப்படும் நாளை எதிர்பார்த்துக் கல்லூரியே காத்திருந்தது. எதிர்பார்த்திருந்தது.