166. உண்மையின் நிழல்
செல்லம்மாள் அப்போது மிகவும் மனம் குழம்பிப் போயிருந்தாள். ‘மகளுக்கு வேலை கிடைக்க வேண்டுமானால், செல்வாக்குள்ள சிபாரிசு வேண்டும். செல்வாக்குள்ள சிபாரிசு வேண்டுமானால், நிலாவழகனைத் தேடித்தான் போக வேண்டும்’ என்று அறிந்த போது செல்லம்மாளுக்கு மலைப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. பணம் இல்லாமல் நிலாவழகனிடம் எதுவும் நடக்காது என்று அவனைத் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
வெறும் அப்பளம், வடாம் இட்டு, நாலு வீடுகளில் விற்றுப் பிழைப்பு நடத்தும் செல்லம்மாளால் மகளுக்கு உத்தியோகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுப்பதென்பது கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத காரியம். அத்தனை சிரமப்பட்டு, மகளைப் படிக்க வைத்து ஆளாக்கியதே பெரிய காரியம். அதற்கு மேல் செல்வாக்குள்ளவர்களைப் பார்த்து, லஞ்சம் கொடுத்து வேலை தேடுவது என்பது செல்லம்மாளால் நிச்சயமாக இயலாது. நிலாவழகன் வீட்டுக்கும் செல்லம்மாள்தான் அப்பளம் கொண்டு போய்க் கொடுக்கிறாள். யாரோ சமையற்கார ஆச்சி ஒருத்திதான் அப்பளத்தைச் செல்லம்மாளிடம் வாங்கிக் கொண்டு பணம் கணக்குப் பார்த்துக் கொடுப்பது வழக்கம். நிலாவழகனை அவள் பார்க்க நேர்ந்ததே இல்லை. முன் பக்க வாசல் வழியாக அந்த வீட்டில் அவள் ஒரு நாளும் நுழைந்ததே இல்லை. பின்பக்க வாசல் வழியாகப் போய்ச் சமையற்கார ஆச்சியைப் பார்த்து விட்டுத் திரும்புவதுதான் செல்லம்மாளின் வழக்கம். தலைவரின் வீடு என்பதால், அந்த வீட்டின் முன் பக்கத்தில் தேர்க் கூட்டம், திருவிழாக் கூட்டமாக எப்போதும் நிரம்பியிருக்கும். கார்களும், ஸ்கூட்டர்களும், சைக்கிள்களும் வாசலில் மொய்த்திருக்கும். அவளைப் போன்ற நிலையிலுள்ள ஏழைகள் நாட்கணக்கில் காத்திருந்தாலும், தலைவர் நிலாவழகனைப் பார்க்க முடியாது. தர்ம தரிசனமே அங்கு கிடையாது. ஏழுமலையான் சந்நிதியில் கூடத் தர்ம தரிசனம் கிடைத்து விடலாம். ஆனால், நிலாவழகன் சந்நிதியில் அது முடியவே முடியாது. மாலையோடும், ஆப்பிளோடும், கரன்ஸி நோட்டுக்களின் புத்தம் புதிய கட்டுக்களுடனும் வருகிறவர்களே மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்கிற நிலையில்m அப்பளம் இட்டு விற்கிற செல்லம்மாள் என்கிற அநாதை விதவைக்கு உடனே எப்படி எதிர்பார்க்க முடியும்? அது நடக்கக்கூடிய காரியமே இல்லை.
அவளைப் பொறுத்த வரை மகளுக்கு வேலை கிடைக்கா விட்டால், எதிர்காலமே இருண்டு போய் விடும். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாயிருந்தது. அடுத்த வேளைச் சோற்றுக்கும், அரையில் உடுக்க ஒரு கிழிசலுக்கும் திண்டாடினாலும், அவள் ‘ஃபார்வட் கம்யூனிட்டி’ என்ற இடையூறு வேறு. வேலை கிடைப்பதைப்