680 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
———————————
போறோம் நாம்?... சும்மா கிடந்தவரைச் சீண்டிவிட்டுவிட்டு. அவமானப்படுத்தின கதையாத்தான் ஆகப் போறது.” என்றார் இன்னொருவர்.
அவர்கள் சாப்பிட்டுக் கைகழுவி எழுந்தபின் ஒட்டல் பையன் ‘பில்’ கொண்டு வந்து கொடுத்தான்.
அவன் கையில் பில் காகித்தோடு அழுக்கடைந்த ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றும் இருந்தது. “சார் எனக்கு இந்தச் சின்னத் தொகையைக் கொண்டாந்து கொடுக்கவே வெட்கமாயிருக்குது. இன்னிக்கிக் காலையிலே பேப்பர்லே சிவானந்தம் மணிவிழாவைப் பற்றி அறிக்கை பார்த்தேன். பார்த்ததுமே அதுக்கு அஞ்சு ரூபாயாவது கொடுக்கணும்னு எடுத்து வச்சேன். நீங்க பேசினதை எல்லாம் கேட்டுக் கிட்டுத்தான் இருந்தேன். அவரோட எழுத்தும் பேச்சும் பலரைத் திருத்தி ஒழுங்குபடுத்தியிருக்கு. என்னைப் போல இருக்கிறவங்க அவருக்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறோம். நீங்க இங்கே சம்பளம் போடறன்னைக்கி வந்தா இதைத் தவிர இன்னும் பதினைஞ்சு ரூபா வசூலுக்கு நான் உறுதி தர முடியும்.” என்று பயபக்தியோடு கூறியவனாக அந்த ஐந்து ரூபாயை நீட்டினான் பையன்.
நண்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். திடீரென்று யானை பலம் வந்த மாதிரி இருந்தது அவர்களுக்கு.
“அண்ணே! சிவானந்தத்துக்கும் அதிர்ஷ்டம் இருக்குது. ஆனால் அந்த அதிர்ஷ்டமே ரொம்ப ஏழையாயிருக்குது. ‘ஜீனியஸ்’ங்களோட அதிர்ஷ்டம் எப்பவுமே ரொம்ப ஏழையாகத்தான் இருக்கும் போலிருக்கு” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே அந்த அஞ்சு ரூபாயை வசூல் நோட்டில் முதல் பக்கத்தில் எழுதி வரவு வைத்தார் செயலாளராகிய இளைஞர். ‘ராமானந்த பவன் ஸர்வர் நன்கொடை ரூபா. 5’ என்று எழுத்துக்கள் நிறைந்தன அந்தப் பக்கத்தில். ஒரு ஜீனியஸைப் புரிந்து கொண்ட ஏழைப்பையனின் மரியாதை நிறைந்த முதல் நிதியாக வந்து சேர்ந்திருந்தது அந்தத் தொகை. (தாமரை, மே, 1963)