168. இங்கிதம்
சேர்மன் அந்த வயதில் எவ்வளவுக்கு எவ்வளவு கலகலப்பாகவும், ஜோவியலாகவும், சுமுகமாகவும் பழகினாரோ அவ்வளவுக்கு நேர்மாறாய் முசுடாகவும், முன் கோபியாகவும், கடுகடுப்பாகவும் இருந்தார் எம்.டி. இவர்தான் சேர்மனின் பிள்ளை என்பதைக் கூட நம்ப முடியாமல் இருந்தது. குணங்களில் அப்பாவும், பிள்ளையும் நேர் மாறாக இருந்தார்கள். அவர் வட துருவம் என்றால், இவர் தென் துருவமாக இருந்தார்.
ஆறாவது மாடியில் இருந்த கம்பெனி நிர்வாக அலுவலகத்துக்குப் போக எம்.டி. லிஃப்ட்டில் வந்து நிற்கும் போது அந்த ஒரு ட்ரிப் மட்டும் பன்னிரண்டு பேர் ஒரே சமயத்தில் ஏற முடிந்த அந்த லிஃப்டில் எம்.டி. ஒருவர்தான் அனுமதிக்கப்படுவார். அப்படி லிஃப்ட் ஆப்பரேடரிடம் உத்தரவே இடப்பட்டிருந்தது. மூடி மேன், கோபக்காரர், முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது என்று பெயரெடுத்திருந்தார் எம்.டி.
ஆனால், பெரியவர் என்று ஊழியர்கள் பிரியமாக அழைக்கும் சேர்மன் லிஃப்டில் போகும் போது இன்னும் பதினொரு பேரை உடன் ஏற்றிக் கொள்ளச் சொல்லியும், அவரவர்கள் இறங்க வேண்டிய ஃப்ளோரில் அவரவர்களை விடச் சொல்லியும் தாமே வலிய முன் வந்து லிஃப்ட் ஆப்பரேட்டரை வற்புறுத்துவார். மற்றவர்களிடம் ஜோக் அடிப்பார். க்ஷேம லாபங்களை விசாரிப்பார். புதிதாகக் கல்யாணமான ஓர் இளைஞனிடம், “என்னப்பா! வருஷம் ரெண்டாச்சு? புரொக்க்ஷனே ஸ்டார்ட் ஆகாமே, ஒரு பார்ட்னர்ஷிப் கம்பெனியா?” என்று கேட்டு லிஃப்டையே கலகலக்கச் செய்வார். கம்பெனி ஊழியர்களைத் தட்டிக் கொடுப்பார். சிலரிடம் கை போட்டுக் குலாவுவார். சகஜமாகப் பழகுவார்.
“இந்த ஆபீஸ்லே எம்.டி. சேர்மன் முதல் எல்லாரும் மேலே போறதுக்கும் கீழே இறங்கறதுக்கும் இந்த லிஃப்ட் ஆப்பரேட்டர் சங்கரன் தான் காரணம்பா?” என்று கிண்டலில் இறங்கி லிஃப்ட் மேனை வம்புக்கு இழுப்பார். -
நேர் மாறாக சின்னவரோ யாரோடும் பேசவே மாட்டார். லிஃப்ட்ஆப்பரேட்டர், குமாஸ்தாக்கள், கீழ் நிலை ஊழியர்களிடம் பெரும்பாலும் சைகைகளைக் கொண்டே வேலை வாங்குவார். முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது. ஹ்யூமர் ப்ரூஃப் மூஞ்சி. தான் சிரிக்காததோடு, சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிற இரண்டு பேரை எதிரில் பார்த்தாலே பிடிக்காது அவருக்கு உடனே தாங்க முடியாத எரிச்சல் வந்து விடும்.அவர் சினிக் ஆனதற்குப் பலர் பலவிதமான காரணங்களைச் சொன்னார்கள். சிறு வயதிலேயே கல்யாணமாகிச் சிறு வயதிலேயே மனைவியைப் பறி கொடுத்து விட்டு, அப்புறம் திருமணமே செய்து கொள்ளாமல், தனிக்கட்டையாகவே காலந் தள்ளினார்