பக்கம்:நித்திலவல்லி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

101


மோகவலையில் சாய்ந்து விடாமல் அவன் தன் மனத்தை அரிதின் முயன்று அடக்கினான்.

“இரத்தினமாலை! இவர் திருக்கானப்பேரிலிருந்து வருகிற வழியில் மோகூரில் நம் பெரியவரைச் சந்தித்து விட்டு அவர் ஆசியோடு இங்கு வந்திருக்கிறார்"- என்று அழகன் பெருமாள் கூறியதும்,

“வரவேண்டும்! வரவேண்டும்"- என அவள் வரவேற்ற அந்தக் குரலை அது தேனிற் செய்து படைக்கப் பட்டதோ என ஐயுற்று வியந்தான் இளையநம்பி.

அழகிய விழிகள் பார்க்கும் என்று தான் இதுவரை அவன் அறிந்திருந்தான். ஆனால் இந்த விழிகளோ நயமாகப் பேசவும் செய்தன. ஆண் பிள்ளைகளைத் தாபத்தால் கொல்ல இந்த வனப்பு வாய்ந்த விழிகளே போதுமானவை என்று தோன்றியது அவனுக்கு. அழகன் பெருமாள் இங்கே எதற்காகத் தன்னை அழைத்துவந்தான் என்று இளைய நம்பிக்கு அவன் மேல் ஆத்திரமே மூண்டது. சில கணங்கள் எதிரே வந்து நிற்கும் அவளிடம் பேச வார்த்தைகள் இன்றி வியந்து நின்றான் அவன். அதே வேளையில் அவளுடைய கண்களின் பார்வை அவனுடைய திரண்டு செழித்த தோள்களிலும் பரந்த மார்பிலும் இலயித்திருந்தது. மீண்டும் அவளே பேசினாள்.

“தாங்கள் இந்த மாளிகையை அந்நியமாக நினைக்கக் கூடாது. பெரியவருடைய குற்றேவலுக்கு என்றும் கட்டுப் பட்டவர்கள் நாங்கள்."

அவளுக்கு என்ன மறுமொழி கூறுவது என்று இப்போதும் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அழகன் பெருமாள் முந்திக் கொண்டு அவளுக்கு மறுமொழி கூறினான்.

“அப்படி ஒரு குற்றேவ்லோடுதான் இப்போதும் வந்திருக்கிறேன் இரத்தினமாலை! இதோ நம் குறளன் செம்பஞ்சுக் குழம்புகொண்டு வந்திருக்கிறான், இனி நீ தான் ஆயத்தமாக வேண்டும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/102&oldid=715267" இலிருந்து மீள்விக்கப்பட்டது