பக்கம்:நித்திலவல்லி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

நித்திலவல்லி / முதல் பாகம்



பார்த்துச் சொல்லும் காரியத்துக்காக நான் இங்கே வரவில்லை...”

“சிறிது பொறுமையோடு கூர்ந்து பார்த்தால் இந்தக் கைகளில் அதைவிடப் பெரிய காரியம் இருப்பதும் புலப்படும்.”

மீண்டும் மீண்டும் அழகன்பெருமாள் இப்படிக் கூறவே, இளையநம்பிக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது அந்தக் கணம் வரை புதிராகவே இருந்தது. அழகன் பெருமாளே மேலும் தொடர்ந்தான்: "நீங்கள் எந்தக் காரியத்திற்காக வந்திருக்கிறீர்களோ, அந்தக் காரியமே உங்களுக்குப் புரியவில்லை என்பது விந்தைதான்.”

“இப்போது நீ என்ன சொல்கிறாய் என்பதே எனக்கு விளங்கவில்லை அழகன் பெருமாள்?”

அழகன் பெருமாள் இளையநம்பியின் காதருகே வந்து ஏதோ மெல்லிய குரலிற் சொல்லிவிட்டு, “இப்போதாவது புரிகிறதா பாருங்கள்?", என்றான். உடனே இளையநம்பி செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பட்ட அந்தக் கைகளை உற்றுப் பார்த்து, அவற்றில் சித்திர வேலைப்பாடுகள் போன்ற மேற்போக்கான கோடுகளைத் தவிர்த்து நுணுக்கமாக நோக்கி ஆராய்ந்த போது அவன் விழிகள் வியப்பினால் மலர்ந்தன. அங்கே மிக அந்தரங்கமான கரந்தெழுத்துகளில்[1] அவன் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை வினாவும் வினாக்கள் இருந்தன. தன் கையில் பிறர் எவரும் புரிந்து கொள்ள முடியாத அந்த இரகசிய எழுத்துக்களான வினாக்களோடு, அதற்கு மறுமொழி தெரிந்து வர அவள் அரண்மனைக்குப் புறப்பட்டுப் போகிறாள் என்பதும் புரிந்தது. அப்படி புரிந்த சுவட்டோடு இளைய நம்பியின் மனத்தில் இன்னும் ஒரு பெரிய சந்தேகமும் எழுந்தது.


  1. ஒரு குழுவினர் தங்களுக்குள் மட்டும் பயன்படுத்தும் இரகசிய எழுத்துகள். ஆதாரம்--சீவக சிந்தாமணி 1767
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/109&oldid=945351" இலிருந்து மீள்விக்கப்பட்டது