பக்கம்:நித்திலவல்லி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


16. முத்துப்பல்லக்குப் புறப்பட்டது.

இளையநம்பி தன் மனத்தில் எழுந்த ஐயப்பாட்டை அழகன் பெருமாளிடமோ, இரத்தினமாலையிடமோ கேட்பதற்கு முன் அங்கே அந்தக் கூடத்தில் சித்திர வேலைப் பாடுகள் அமைந்த அழகிய சிறிய முத்துப் பல்லக்கு ஒன்றைப் பணியாட்கள் தூக்கிக் கொண்டு வந்து வைத்தார்கள். ஒளிவீசும் கொற்கை வெண்முத்துக்கள் பதிக்கப்பட்ட அந்தப் பல்லக்கு அங்கே வந்ததும் சந்திரோதயமே ஆகியிருப்பது போன்றதோர் அழகு வந்து பொருந்தியது.

குறளனிடமிருந்து செம்பஞ்சுக் குழம்பு பேழையையும், அதைத் தீட்டும் தந்த எழுதுகோலையும் பெற்றுக்கொண்டு ஒரு தோழிப் பெண் முதலில் பல்லக்கில் ஏறிக்கொண்டபின் இளைய நம்பியையும், அழகன் பெருமாளையும் நோக்கிப் புன்முறுவல் பூத்தபடி கணிகை இரத்தினமாலையும் அதில் ஏறிக்கொண்டாள்.

பல்லக்குப் புறப்படு முன் மீண்டும் வெளியே தலையை நீட்டி இளைய நம்பியைப் பார்த்து ஆளைக்கிறங்கச் செய்யும் ஓர் அரிய மோகனச் சிரிப்போடு, “ஐயா திருக்கானப் பேர்க்காரரே! இந்தக் கைகள் மேற்கொண்ட எந்தக் காரியங்களிலும் இதுவரை தோற்றதில்லை"--என்று தன் அழகிய கைகளைக் காண்பித்துச் சொன்னாள் இரத்தினமாலை. அதுகாறும் அவளைப் பொறுத்தவரை கல்லாயிருந்த அவன் மனமும் இப்போது மெல்ல இளகியிருக்க வேண்டும். அந்த நெகிழ்ச்சியின் அடையாளமாக முத்துப் பல்லக்கிலிருந்து தெரியும் அவளுடைய சுந்தர மதிமுகத்தை ஏறிட்டுப் பார்த்து, “புரிகிறது! உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வெற்றி யோடு திரும்பி வா” என்றான் இளையநம்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/110&oldid=715272" இலிருந்து மீள்விக்கப்பட்டது