பக்கம்:நித்திலவல்லி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

நித்திலவல்லி / முதல் பாகம்



இருந்தன. உறங்காத காரணத்தால், கழிந்து போன ஓர் இரவே ஒராயிரம் இரவுகளின் நீளத்தோடு மெல்ல மெல்ல நகர்ந்து போனாற் போலிருந்தது.

மனத்தில் தாப மிகுதியினாலும், எல்லாரிலுமிருந்து பிரிந்து திடீரென்று தான் மட்டும் தனியாகி விட்டாற் போன்ற ஒரு பிரமையினாலும் விடிந்து வைகறை மலர்ந்த பின்னும் கூடச் சுற்றிலும் இருளே இருப்பது போல் உணர்ந்தாள் அவள். இதைக் கண்டு அவள் தாய் பதறிப் போனாள்:-

“பெண்ணே! இதென்ன துயரக் கோலம்? நீ இரவெல்லாம் உறங்கவில்லை போலிருக்கிறதே? உன் கண்கள் ஏன் இப்படிக் கோவைப் பழங்களாகச் சிவந்திருக்கின்றன? கனவில் ஏதேனும் காணத் தகாதவற்றைக் கண்டு பயந்து கொண்டாயா? உன் கண்களையும் முகத்தையும் பார்த்தால் உறங்கினதாகவே தெரியாத போது, நீ கனவு எப்படிக் காண முடியும்? ஏன் இப்படி இருக்கிறாய்! உனக்கு என்ன நேர்ந்துவிட்டது?”

--தாய்க்கு என்ன மறுமொழி கூறுவது என்று புரியாமல் தவித்தாள் செல்வப் பூங்கோதை. ஆனால், அடுத்த விநாடியே தாயிடம் அவள் கேட்ட கேள்வியிலிருந்து தனக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்று தன் தாயே அனுமானித்துக் கொள்ள இடங் கொடுத்து விட்டாள்:-

“அம்மா! நேற்றிரவு வெள்ளியம்பலப் பகுதியில், ஒற்றன் என்று சந்தேகப்பட்டுக் களப்பிரர்களின் பூதபயங்கரப் படை வீரர்கள் யாரையோ சங்கிலியாற் பிணித்து இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்தோமே; அது அந்தத் திருக்கானப்பேர்க்காரராக இருக்க முடியாதுதானே? என் மனம் அதை நினைத்தே கலங்கிக் கொண்டிருக்கிறது.”

திருடப் பயன்படும் கன்னக்கோலைப் பிறர் திருடி விடாமல் ஒளிக்க முயலுகையில் பிடிபட்ட கள்வனைப் போல், எதை மறைக்க முயன்று கொண்டிருந்தாளோ, அதன் மூலமே தாயிடம் பிடிபட்டு விட்டாள் செல்வப்பூங்கோதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/115&oldid=945338" இலிருந்து மீள்விக்கப்பட்டது