பக்கம்:நித்திலவல்லி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

115


 அவள் கூறியவற்றை எல்லாம் கேட்டு விட்டுச் சிரித்தபடியே அவள் முகத்தையும், கண்களில் தென்படும் உணர்வுகளையும் கூர்ந்து நோக்கினாள் தாய். பெண்ணின் கண்களில் தெரியும் நளினமும், மென்மையும் நிறைந்த நுண்ணுணர்வுகளை மிகவும் எளிமையாகப் புரிந்து கொண்டாள் அவள். இங்கிதமாகவும், நளினமாகவும் வினாவ வேண்டிய ஓர் உணர்வின் பிடியில் மகள் கட்டுண்டிருப்பது தாய்க்குப் புரிந்தது.

“நன்றாயிருக்கிறது மகளே! இதற்காகவா விடிய விடிய உறக்கமின்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய் நீ! ஆண்மக்கள் மனவலிமை மட்டுமின்றி உடல் வலிமையும் உடையவர்கள். தங்களுக்கு ஏற்படும் அபாயங்களிலிருந்து மீளவும், தப்பவும் அவர்களுக்குத் தெரியும். வீரர்களைப் பற்றிப் பேதைகள் கவலைப்பட்டு ஆகப் போவதென்ன?”

“பேதைகளின் கவலைகளையும், கண்ணீரையும் பின் தங்க விடாத வீரர்கள் இவ்வுலகில் எங்கேதான் இருக்கிறார்கள் அம்மா?”

“ஒவ்வொன்றாய் நீ கேட்கிற கேள்விகளைப் பார்த்தால், உனக்கு மறுமொழி கூற என்னால் ஆகாது பெண்ணே? நேரமாகிறது. பொய்கைக் கரைக்கு நீராடப் போக வேண்டாமா? திருமோகூர்ப் பெரிய காராளர் வீட்டுப் பெண்கள் சூரியோதயத்துக்கு முன் நீராடி வீடு திரும்பி விடுவார்கள் என்று நற்பெயர் பெற்றிருப்பதைக் கெடுத்து விடாதே மகளே!” என்ற அவளையும் அழைத்துக் கொண்டு பொய்கைக் கரைக்கு நீராடப் புறப்பட்டாள் தாய்.

பனியும், மெல்லிருளும் புலராத மருத நிலத்து வைகறையில், பசும் பயிர்ப் பரப்பிடையே குடங்களை ஏந்தியபடி நீராடச் சென்றார்கள் அவர்கள். நீராடச் செல்லும்போது, பெரியகாராளர் மகள் ஏந்திச் சென்ற குடம் வெறுமையாயிருந்தது என்றாலும், மனம் நினைவுகளால் நிறைந்திருந்தது. பார்த்துப் பழகிய மறுநாளிலிருந்து தாயும், தந்தையும், சுற்றமும், உற்றாரும், வீடு வாயிலும் எல்லாம் மறந்து போகும்படி தன்னையே நினைக்கச் செய்துவிட்ட ஒரு சுந்தர இளைஞனைப் பற்றிய நினைவுகளே அவள் மனத்தில் நிறைந்திருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/116&oldid=945339" இலிருந்து மீள்விக்கப்பட்டது