பக்கம்:நித்திலவல்லி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

117


அலை ஒன்று வந்து கரை ஓரத்து மணற்பரப்பை மூடிக்கோடுகளை அழிக்கவும் இணையாக இருந்தது. அலை செய்த அழிவு வேலையால் வட்டம் பொருத்தமாக இணைந்திருந்ததா, இல்லையா என்பதையே அவள் கண்டறிய முடியாமல் போயிற்று. அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு.

கண்களை மூடிக் கொண்டு மீண்டும் விரைந்து கோட்டைத் தொடங்கிச் சுழித்து வட்டம் வரைந்தாள். மீண்டும் முன் நேர்ந்தபடியே நேர்ந்தது. அவள் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. வாய்விட்டு அழவும் முடியவில்லை. அந்தப் பொய்கை, அதிலே மூழ்கி நீராடிக் கொண்டிருந்த தாய், அதன் கரைகள், அதில் பூத்திருந்த நீர்ப்பூக்கள், கீழ்வானத்தின் சிவப்பு - எல்லார் மேலும் எல்லாவற்றின் மேலும் காரணம் புரியாது எதற்காகவோ சினம் கொண்டாள் அவள். அந்தச் சினத்தை அவளால் தடுக்க முடியவில்லை.

தான் கண்ணீர் சிந்தி அழுவதைத் தாய் பார்த்துவிடக் கூடாதே என்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தாள் அவள். நினைத்தது கை கூடுமா கூடாதா என்று கூடலிழைத்து அறிய முயன்ற தன் அற்ப ஆவலும் நிறைவேறாது போய் விட்டதே என்று தவித்து வருந்தியது அவள் மனம். நீராடி வீடு திரும்பும்போதும் தன்னுடைய அந்த ஏமாற்றத்தைத் தாய்க்கு மறைத்து விடவே முயன்றாள் அவள். தாய்க்கும் தெரியாமல் மறைக்க ஓர் அந்தரங்கம் வாழ்வில் தனக்குக்கிடைக்க முடியும் என்பதைச் சில நாட்களுக்கு முன் அவளே நம்பியிருக்க மாட்டாள். இப்போது அந்த அதிசயம் அவள் வாழ்விலேயே நடந்து விட்டது. தாயிடமும் பங்கிட்டுக் கொள்ள முடியாத அந்தரங்கம் ஒரு பருவத்தில் ஒரு நட்பைப் பொறுத்து ஒவ்வோர் இளம் பெண்ணுக்கும் உண்டு என்பதே முதல் முதலாக இன்றுதான் செல்வப் பூங்கோதைக்குப் புரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/118&oldid=715274" இலிருந்து மீள்விக்கப்பட்டது