பக்கம்:நித்திலவல்லி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

நித்திலவல்லி / முதல் பாகம்



சத்திரங்கள் மூலமாகவும் செய்து வரும் தான தருமங்களும் உங்களைக் காப்பாற்றும்.”

“தங்களுக்கு என்னைப் பற்றி இவ்வளவு தெரிந்திருப்பது எனக்கே வியப்பைத் தருகிறது. தான தருமங்கள் செய்வது பன்னெடுங்காலமாக எங்கள் குடும்பத்தின் வழக்கம். அதற்காகப் பிறர் புகழைக் கூட நாங்கள் எதிர் பார்ப்பதில்லை.”

பெரிய காராளர் நிலை இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஆகியிருந்தது. வந்திருக்கும் புதியவனின் பேச்சு அவன் மதுராபதி வித்தகருக்கும், பாண்டிய மரபினருக்கும் மிக மிக வேண்டியவன்தான் என்பது போல் காட்டினாலும் நல்லடையாளச் சொல்லைத் தெரிவிக்காத வரை அவனை எப்படி நம்புவது என்று தயக்கமாக இருந்தது. பெரியவரைச் சந்திப்பதற்கும் நாளும் நாழிகையும் குறித்து நினைவு வைத்திருக்கும் இந்தப் புதிய மனிதன் களப்பிரர்களின் ஒற்றனாக இருக்க முடியாது என்று தோன்றினாலும், ஒற்றன் இல்லை என்று முடிவு செய்யவும் இயலாமல் இருந்தது. அதனால்தான் எதிலும் சார்பு காண்பிக்காமல், நடுநிலையாகப் பேசியிருந்தார் பெரிய காராளர். வந்திருக்கும் இந்த அதிசய விருந்தினரிடம் களப்பிரர்களை எதிர்த்துப் பேசுவதும் கூடாது. முற்றாகப் பாராட்டிப் பேசுவதும் கூடாது. நடுநிலையாக இருந்து உண்மையைக் கண்டு பிடித்த பின்பே, தன் விருப்பு வெறுப்புகளை அவனிடம் காண்பிக்க வேண்டும் என்ற கருத்துடன், “ஐயா! நாங்கள் வேளாளர்! நாட்டின் அரசியல் விருப்பு வெறுப்புக்களைப் பற்றி எங்களைக் கேட்டுப் பயனில்லை. நிலத்தை உழுது பயன் கொள்ளுவதுதான் எங்கள் தொழில்”. என்பது போலவே பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் உள்ளுர ஒரு நம்பிக்கையும் இருந்தது. வந்திருப்பவனைத் தன்னுடைய அறக்கோட்டத்திற்கு அழைத்துச் சென்று உண்ணவும் தங்கவும் ஏற்பாடு செய்துவிட்டுத் தானே ஆலமரத்தடிக்குச் சென்று பெரியவரைக் கண்டு, 'இப்படி யாரையாவது உங்களை வந்து காணச் சொல்லியிருந்தீர்களா?' என்று கேட்டு விடலாம் என்பதாக நினைத்திருந்தார் பெரிய காராளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/121&oldid=945301" இலிருந்து மீள்விக்கப்பட்டது