பக்கம்:நித்திலவல்லி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

நித்திலவல்லி / முதல் பாகம்



“குறளா! இனி நீ இங்கிருக்க வேண்டிய காரியம் எதுவும் இல்லை. யாருமே காவலின்றி உப வனம் தனியே இருக்கலாகாது. நீ அங்கே போய் இரு. மாலை நேரத்திற்குப் பின் காரி, கழற்சிங்கன், செங்கணான், சாத்தன் எல்லாரும் திருப்பி வந்து விடுவார்கள். ஆனால் நீ மட்டும் தனியாகப் போகிற காரணத்தால் நிலவறை வழியாகப் போக வேண்டாம். அக நகருக்குள் போய்க் கோட்டை வாயில் வழியே வெளியேறிப் புறநகரில் உப வனத்துக்குப் போ. தொடர்ந்து அகநகர் வீதிகளில் தென்படாமல் நிலவறை வழியாகவே வந்து போய்க் கொண்டிருந்தோமானால், ஊருக்குள்ளே நாமும் சந்தேகத்துக்கு உரியவர்கள் ஆகி விடுவோம். அகநகரிலும் கோட்டையின் உட்பகுதிகளிலும் நடமாட நமக்கு இருக்கும் உரிமையை அவ்வப்போது நிலைநாட்டுவது போல் பழக வேண்டும் நாம்” - என்று கூறிக் குறளனைக் கணிகை மாளிகையின் புற வாயில் வழியே உப வனத்துக்கு அனுப்பி வைத்தான் அழகன் பெருமாள்.

குறளன் புறப்பட்டுச் சென்றதும் அழகன் பெருமாளிடம் வேறு சில சந்தேகங்களை வினாவினான் இளையநம்பி.

“இரத்தினமாலைக்கு உதவுவதற்கு, அவள் கைகளில் நாம் தீட்டியனுப்பியிருக்கும் வினாக்களுக்கு, உடனே மறுமொழி எழுதி அனுப்பக்கூடிய விதத்தில் அங்கே அரண்மனையில் நம்மவர்கள் யாரேனும் இருக்கிறார்களா அழகன் பெருமாள்?”

“ஊமைகள் போலவும், செவிடர்கள் போலவும் நடிக்கும் நம்மவர்கள் சிலர் அரண்மனையில் ஊழியம் புரிகிறார்கள். அரண்மனை அந்தப்புர மகளிருக்குப் பூத் தொடுக்கவும் பூணவும், புனையவும், அலங்கரித்துக் கொள்ளவும் உதவுகிற பெண்களில் பலர் இரத்தின மாலையால் அப்பணிக்கு அங்கே அனுப்பப் பெற்றவர்கள். அவர்களில் ஒருத்திக்கு இதே வகையைச் சேர்ந்த கரந்தெழுத்துக்களில் பயிற்சி உண்டு. அவள்தான் இரத்தினமாலை திரும்பும்போது மறு மொழிகளை எழுதி அனுப்புவாள். களப்பிரர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/125&oldid=945304" இலிருந்து மீள்விக்கப்பட்டது