பக்கம்:நித்திலவல்லி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

125



அந்தப்புரப் பெண்களிடமும் உரிமை மகளிரிடமும் நம் இரத்தின மாலைக்குச் செல்வாக்கு உண்டு. நல்ல வாசனையுள்ள பொதிய மலைச் சந்தனம், பூக்கள், பிறவகை நறுமணப் பொருள்கள் இவற்றை வழங்கி வழங்கி அரண்மனைப் பெண்களிடம் தோழமையை வளர்த்திருக்கிறாள் அவள். அந்தத் தோழமையினால்தான் பல காரியங்களை நாம் சாதிக்க முடிகிறது ஐயா!” என்று அழகன் பெருமாள் விளக்கமாகச் சொன்ன பின்புதான், முதல் நாளிரவு நிலவறை வழியாக உப வனத்துக்குச் செல்லும்போது கணிகையர்களைப் பற்றி ஓரளவு குறைவாக மதிப்பிட்ட தன் சொற்கள் ஏன் அவனுக்கு அவ்வளவு சினமூட்டின என்று இளைய நம்பிக்குப் புரிந்தது. அழகன்பெருமாள் இப்போதாவது ஆறுதல் அடையட்டும் என்று இளையநம்பி ஒரு வாக்கியம் சொன்னான்:-

“சேற்றிலும் தாமரைகள் பூக்கின்றன.”

“தவறு! அந்த உவமையை நீக்கிவிட்டே புகழலாம் நீங்கள். சேற்றில்தான் தாமரைகள் பூக்கின்றன! வேர்தான் சேற்றில் இருக்கிறது. பூக்களில் சேறு படுவதில்லை. பூக்களுக்கும் சேற்றுக்கும் தொடர்பு உண்டு. ஆனால் பூவில் சேறுபடுவது கிடையாததோடு, தெய்வங்களின் கால்களும், பெண்களின் கைகளும் படுகின்றன.”

“உப வனத்தைக் காப்பதைவிடத் தர்க்க நியாயங்களையும் இலக்கண விதிகளையும் காக்கப் போகலாம் நீ...”

“நான் காவல் செய்யாவிட்டாலும், நியாயங்களும் இலக்கணங்களும் பத்திரமாக இருக்கும். உண்மையில் ஒரு பெரிய புலவர் மரபில் வந்தவன்தான் நான். பெரியவருடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு இந்த உப வனத்தைக் காத்துக் கொண்டு வருகிறேன். அவ்வளவுதான்.”

“நான் கூறியவற்றில் எவையேனும் உன் மனத்தைப் புண்படுத்தியிருந்தால் பொறுத்துக் கொள்.”

“அப்படி எதுவுமில்லை ஐயா? நாமிருவரும் ஒரே கடமைக்காக ஒரே தலைமையின் கீழ் இயங்குகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/126&oldid=945305" இலிருந்து மீள்விக்கப்பட்டது