பக்கம்:நித்திலவல்லி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

நித்திலவல்லி / முதல் பாகம்


கொண்டுபோகக் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு திரிகிறது. நீயோமுரட்டுப்பிள்ளை, எங்கும் எதற்கும் உணர்ச்சிவசப்பட்டு உன்னை வெளிப்படுத்திக் கொண்டு விடாதே. பாண்டவர்கள்கூட வனவாசமும் அஞ்சாத வாசமும் செய்திருக்கிறார்கள். நாமும் இப்போது ஏறக்குறைய பாண்டவர்களின் நிலையில்தான் இருக்கிறோம்” என்று அறிவுரை கூறியிருந்தார். அப்படி அவர் அறிவுரை கூறுகையில், “பாண்டவர்கள் கெளரவர்களோடு சூதாடினார்கள். நாட்டை இழந்தார்கள். நாம் யாரோடும் சூதாடவில்லையே தாத்தா?” --என்று பதிலுக்குத் தான் கேட்டதும், “சூதாடாமலே களப்பிரர்களுக்கு நாட்டைத் தோற்று விட்டோம் நாம்! இப்படி அதிகப் பிரசங்கித்தனமான கேள்விகளை என்னிடம் கேட்பது போல் மதுராபதி வித்தகரிடம் தவறிப்போய்க் கூடக் கேட்காதே. அவர் வார்த்தைகளைப் பொன்னுக்கு மாற்று உறைத்துப் பார்ப்பது போல் பார்க்கிறவர். சொற்களை எண்ணிச் செலவழிக்கிறவர். எதிராளியின் சொற்களை எண்ணி நிறுத்துப் பார்க்கிறவர்"-- என்பதாகப் பாட்டனார் அப்போது தனக்கு மறுமொழி கூறியிருந்ததும் இளையநம்பிக்கு ஞாபகம் வந்தன. நினைக்கும் போது அவனுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. மதுராபதி வித்தகர்தான் வார்த்தைகளை எண்ணிச் செலவழிப்பவர் என்று பாட்டனார் சொன்னார். அந்தப் பெரியவரைப் பார்க்க முடிவதற்கு முன்பே வார்த்தைகளைச் செலவழிக்கவே விரும்பாதவர்கள் ஒவ்வொருவராக எதிர்ப்படுவது போலிருந்தது. கேட்கிறவர்கள் எல்லாம் தனக்கு ஏன் மறுமொழி சொல்லாமல் போகிறார்கள் என்பது அவனுக்கு விளங்காத மர்மமாக இருந்தது. உலகைச் சூழும் மாலை இருள் அவன் மனத்தையும் சூழ்ந்தது.

அடுத்து அவன் நுழைந்த வேளாண் மக்கள் தெருவில் கலப்பைக்குக் கொழு அடிக்க இரும்பைக் காய்ச்சிக் கொண்டிருந்த ஒரு கொல்லனின் உலைக்களம் எதிர்ப்பட்டது. செங்கீற்றாக மின்னிப் பளபளக்கும் காய்ச்சிய இரும்பைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/13&oldid=714840" இலிருந்து மீள்விக்கப்பட்டது