பக்கம்:நித்திலவல்லி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

131



சோதனைக்குப் பின் அவன் வேண்டியவன் என்று தெரிந்து விட்டால், சோதனை செய்ததற்காகக் கூச வேண்டிய நிலை ஏற்படும். வேண்டாதவன் என்று தெரிந்து விட்டாலோ அவனுக்குக் கோபம் வரும். அவனோ உடனே ஆத்திரப்படுகிறவனாகவும், முன் கோபக்காரனாகவும், உரத்த குரலில் சப்தம் போட்டுப் பேசுகிறவனாகவும் இருந்தான். இதையெல்லாம் விடப் பெரிய அபாயம், தன்னுடைய நீண்ட புலித்தோல் அங்கிக்குள் சற்றே மறைத்தாற் போல் உறையிட்ட வாள் ஒன்றையும் வைத்திருந்தான் அவன்.

பாண்டிய நாட்டில் தங்கள் ஆட்சிக்கு எதிராகக் கலகம் எதுவும் எழலாகாது என்ற கருத்தில் களப்பிரர்கள் ஆட்சியில், பொது மக்கள் வாளும், வேலும் கொண்டு பயில்வது தடுக்கப்பட்டிருந்தும், ‘இவன் எப்படி வாளைக் கைக் கொண்டு வெளிப்பட்டுப் பழகுகிறான்?’ என்பதுதான் காராளரின் மிகப் பெரிய ஐயமாயிருந்தது.

'ஒன்று இவன் நம்மை ஆழம் பார்க்க வந்த களப்பிரப்பூத பயங்கரப்படை ஒற்றனாக இருக்க வேண்டும்; அல்லது வருவது வரட்டும் என்று எதற்கும் துணிந்து வாள் வைத்திருப்பனாக இருக்க வேண்டும்’ என்று தோன்றியது காராளருக்கு. இந்த இரண்டைத் தவிர வேறு எதையுமே உய்த்துணர இயலவில்லை. அவனுடைய வயதைப் பற்றிய தன்னுடைய முதல் அனுமானம் கூடத் தவறானதோ என்று இப்போது நெருங்கி நின்று கண்ட பின் நினைத்தார் அவர். வளர்ச்சியினாலும் முகத்தில் நெகிழ்ச்சியோ முறுவலோ ஒரு சிறிதும் தெரியாத குரூரத்தினாலும் வயது கூடுதலாகத் தோற்றுகிறதோ என்று இப்போது எண்ணினார் அவர். மதுராபதி வித்தகரைச் சந்தித்துவிட்டு அறக் கோட்டத்திற்குத் திரும்பிய பெரிய காராளர் அங்கே அந்த அறக் கோட்டத்தின் கூடத்தில், பசி எடுத்து இரை தேடும் புலி உலவுவது போல உலவிக் கொண்டிருந்த அவனை மீண்டும் மிக அருகே நெருங்கிக் கண்டபோது இவ்வாறுதான் எண்ணத் தோன்றியது.

அவன் அவரைக் கண்டதும் அடக்க முடியாத ஆவலோடு “இப்போதாவது என்னைப் பெரியவர் இருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/132&oldid=945331" இலிருந்து மீள்விக்கப்பட்டது