பக்கம்:நித்திலவல்லி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

நித்திலவல்லி / முதல் பாகம்



இடத்துக்கு அழைத்துச் செல்லும் முடிவோடு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்"- என்று கேட்டான்.

“அடடா! பார்த்தீர்களா? பார்த்தீர்களா? மீண்டும் அரசியலுக்கு வருகிறீர்களே? நான் அதற்காக இப்போது இங்கே வரவில்லை. என்னுடைய அறக்கோட்டத்துக்கு யார் வந்தாலும் எண்ணெய் நீராடச் செய்து உணவளித்து அனுப்புவது வழக்கம். நீங்களோ நெடுந்தூரம் அலைந்து களைத்துத் தென்படுகிறீர்கள். இங்குள்ள மல்லன் ஒருவன் எண்ணெய் தேய்த்து உடம்பு பிடித்து விடுவதில் பெருந்திறமை உடையவன். அவனிடம் எண்ணெய் தேய்த்துக் கொண்டு நீராடிவிட்டு இந்த அறக்கோட்டத்தின் உணவையும் உண்டு முடித்தீர்களானால், எழுந்திருக்கவே மனம் வராமல் சுகமான உறக்கம் வரும்.”

“ஐயா! சுகமான உறக்கத்துக்கு உங்களிடம் நான் வழி கேட்கவில்லை. என்னுடைய இந்த உடல், தொடர்ச்சியாக ஐந்து நாள் உறக்கம் விழித்தாலும் தாங்கும். உறக்கத்தைப் பற்றியோ, உணவைப் பற்றியோ நான் அதிகம் கவலைப் படவில்லை.”

“நீங்கள் கவலைப்படவில்லை என்றாலும் உங்களுக்காக நான் கவலைப்படுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.”

“ஒருவரைப் பற்றி மற்றொருவர் கவலைப்படுவதற்கு, நாம் இன்னும் அவ்வளவு ஆழமாக நெருங்கிப் பழகிவிட வில்லையே?”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

“காரணத்தோடுதான் சொல்கிறேன். நீங்கள் என்னை முழுமையாக நம்பவில்லை என்பது எனக்குப் புரிகிறது. உங்கள் கண் காண எதிரே இரண்டு களப்பிரர்களை என் வாளால் குத்திக் கொன்று காட்டினால்தான் நம்புவீர்கள் போலிருக்கிறது” -என்று தனக்கே உரிய உரத்த குரலில் அவன் இரையவும், காராளருக்கு அவனிடம் ஏன்தான் பேச்சுக் கொடுத்தோம் என்று கவலையாகி விட்டது. அவனைப் போன்று வஞ்சகமில்லாத வெள்ளை முரடனை ஓரளவு இதமாகப் பேசித்தான் வழிக்குக் கொண்டுவர முடியும் போலிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/133&oldid=945332" இலிருந்து மீள்விக்கப்பட்டது