பக்கம்:நித்திலவல்லி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

133



சாம, தான, பேத, தண்டம் என்ற உபாயங்களில் முதல் உபாயத்தைத் தவிர வேறெதனாலும் அவனை வழிக்குக் கொண்டு வர முடியாது போலிருந்தது. அவனை வழிக்குக் கொண்டு வர முடியாதவரை தன் பரிசோதனையும் நிறைவேறாதென்று கருதினார் அவர். அடுத்த கணமே அவனிடம், அவருடைய உரையாடலின் தொனியும் போக்கும் மாறின.

“நம்பிக்கை என்பது ஒரே அளவில் அன்பைப் பரிமாறிக் கொள்வதுதான் என்றால், என்னுடைய அறக்கோட்டத்தில் நான் செய்யும் உபசாரங்களை நீங்கள் முதலில் நம்பி, ஏற்க வேண்டும். இருபுறமும் நிறைய வேண்டிய ஒரு நம்பிக்கையை, ஏதாவது ஒருபுறம்தான் முதலில் தொடங்க வேண்டியிருக்கும்...”

இதைக் கேட்டு முதலில் ஒன்றும் புரிந்து கொள்ளாதது போல காராளரை ஏறிட்டு நோக்கி விழித்த அவன், சில விநாடிகளுக்குப் பின்,

“இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்று சூடாகத் தெரியும் ஒலி தொனிக்கக் கேட்டான். காராளர் சிரித்துக் கொண்டே இதற்கு மறு மொழி கூறினார்:-’

“இந்த அறக் கோட்டத்தின் உபசாரங்கள் எதையும் நீங்கள் மறுக்காமல் ஏற்க வேண்டும்.”

பதிலுக்கு அவன் முகத்தில் சிரிப்போ, மலர்ச்சியோ இல்லை. இளையநம்பியின் முகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு சுமுக பாவமும் கவர்ச்சியும் உண்டோ, அவ்வளவிற்கு இவன் முகத்தில் கடுமை இருந்தது. சுமுகத்தன்மை வறண்டிருந்தது.

அவனுடைய மெளனத்தை இசைவாகப் புரிந்து கொண்டு, அறக்கோட்டத்து மல்லனை எண்ணெய்ப் பேழையுடன் வரச் செய்தார் அவர். புதியவனை நீராட்ட அழைத்துச் செல்லுமுன் மல்லனைத் தனியே அழைத்து இரண்டு விநாடிகள் இரகசியமாக அவனோடு ஏதோ பேசினார். அவர் கூறியதற்கு இணங்கித் தலையசைத்தான் அந்த மல்லன். காராளர் கூடத்திலேயே நின்று கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/134&oldid=945333" இலிருந்து மீள்விக்கப்பட்டது