பக்கம்:நித்திலவல்லி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

137



“தெரியும். தெரிந்தால் என்ன? அந்தத் தடைக்கு நான் கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும் என்று எந்த வேதத்தில் எழுதியிருக்கிறது?”

“வேதத்தில் எதுவும் எழுதவில்லை என்றாலும், இந்த வாளை வைத்திருப்பது உங்களுக்கு அபாயத்தைத் தேடிக் கொண்டு வரும்...”

“என்னைத் தேடி வரும் அபாயங்களை நான் சுகமாகத் திரும்பிச் செல்ல விட்டுவிட மாட்டேன். அந்த அபாயங்களையே நான் இந்த வாள் முனையில்தான் சந்திப்பேன். வருகின்ற அபாயங்கள் இந்த வாளின் கூர்மையான நுனியில் மோதிச் சாகத்தான் முடியும்." இந்த வாக்கியங்களைக் கூறும் போது அந்தப் புதியவனின் கண்கள் நெருப்புக் கோளங்களாகச் சிவந்து மின்னின. ஒரு கணம் பாயப் போகிற புலி போலவே மல்லனின் கண்களுக்குத் தோன்றினான் அவன்.

“அதிருக்கட்டும்! உங்கள் அறக்கோட்டத்தை நடத்தும் பெரிய காராள வேளாளர் தனக்கு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாதென்று முதலில் என்னைச் சந்தித்தபோது ஒரேயடியாகச் சாதித்தாரே? இப்போது எப்படி என்னை நம்பினார்?”

“நீங்கள் சந்தேகத்துக்கு உரியவர் அல்லர் என்று அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம்"- என்றான் மல்லன். அவர்கள் பெரியவர் மதுராபதி வித்தகர் தங்கியிருந்த ஆலமரத்தடிக்குச் செல்லுகிற வழியில், அங்கங்கே மறைந்திருந்து வழியைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆபத்துதவிகள், அந்தப் புதிய மனிதனோடு தங்களில் ஒருவனான மல்லன் துணை வருவதைக் கண்டு ஐயப்பாடு தவிர்த்தனர்.

அவர்கள் இருவரும் போய்ச் சேர்ந்த போது பெரியவர் ஆலமரத்தின் வடபகுதியில் குன்றின் கீழிருந்த புல்வெளியில் இருந்தார். அந்தப் புல்வெளியின் பசுமையில் அப்போது கண்கொள்ளாக் காட்சியாய்ச் சிறுசிறு புள்ளிமான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. மிகவும் சிறியதும் மருண்டு மருண்டு நோக்கும் அழகிய விழிகளை உடையதும் ஆகிய ஒரு புள்ளி மானைத் தடவிக் கொடுத்தபடியே புல்வெளியில் அமர்ந்திருந்த பெரியவர் திடீரென்று தன் கைப் பிடியிலிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/138&oldid=945324" இலிருந்து மீள்விக்கப்பட்டது