பக்கம்:நித்திலவல்லி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

13


சம்மட்டியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்த அந்தக் கொல்லனின் கண்கள் சிவந்து கழன்று விழுந்து விடுவது போல் உலை ஒளிபட்டு மின்னின. வைரம் பாய்ந்த கருந்தேக்கு மரத்தில் செதுக்கி எடுத்து எண்ணெய் பூசினாற் போல் மின்னும் அவனுடைய அகன்ற மார்பையும் திரண்ட தோள்களையும் கண்டபோது--

“பாண்டி மண்டலத்தின் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் நிறைந்திருக்கும் இப்படிப்பட்ட வலிமை வாய்ந்த உழைப்பாளிகளின் பயனை எல்லாம் எங்கிருந்தோ வந்த அந்நியரான களப்பிரர்கள் அல்லவா அநுபவிக்கிறார்கள்” என்று கழிவிரக்கத்தோடு நினைந்து நெட்டுயிர்த்தான் இளையநம்பி.

“கரும்பொற் கொல்லரே! மதுராபதிப் பெரியவரைப் பார்க்க வேண்டும்... அவர் இருக்கும் இடத்தைப் பற்றி வினாவைத் தொடங்கினாலே இந்த ஊரில் எல்லாரும் ஊமைகளாகி விடுகிறார்கள்.”

“கேட்க வேண்டியதைச் சொல்ல வேண்டிய வார்த்தையால் கேட்டால் பதில் சொல்வார்கள்"--

“நான் என்ன பாலிமொழியிலா கேட்கிறேன்? தமிழில் தானே கேட்கிறேன்?” .

‘பாலியில் கேட்டால் பதில் கிடைக்காது...இதுதான் கிடைக்கும்” -என்று சம்மட்டியால் பழுக்கக் காய்ந்த கொழுமுனையை மறுபடி ஓங்கி ஓங்கி அறையத் தொடங்கினான் கொல்லன். .

“ஐயா! நான் பேசியதைத் தவறாகக் கொள்ளக்கூடாது. களப்பிரர்கள் பாண்டி நாட்டில் தமிழ் வழக்கை அழித்துப் பாலிமொழியைப் புகுத்துவதை என்னைப் போலவே நீங்களும் வெறுக்கிறீர்கள் என்று தெரிகிறது. நீங்கள் என்னை நம்ப வேண்டும்"--

“சொல்ல வேண்டிய வார்த்தையைச் சொன்னால் நம்பலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/14&oldid=714851" இலிருந்து மீள்விக்கப்பட்டது