பக்கம்:நித்திலவல்லி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

143


“அழகன் பெருமாளுக்கும் மற்றவர்களுக்கும் அது தெரிந்திருக்கும்.”

“என் கட்டளைகளை ஒரு மாத்திரை ஒலி கூட மிகை யாகவோ, குறைவாகவோ புரிந்து கொள்ளாமல் சரியாகப்புரிந்து கொள்கிறவன் அவன்! அவனிடமிருந்து பிறர் யாரும் அறிந்திருக்க முடியாது.”

“பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா! இது மாலையில் தெரிந்த செய்தி. இரவில் மேலும் தெளிவாகத் தெரியும். அவற்றையும் தெரிந்து கொண்டு நீங்கள் உலாவப் புறப்படு முன் மீண்டும் வருகிறேன்.”

“வரும்போது நீங்கள் மட்டும் தனியாகவே வாருங்கள் காராளரே! என் குறிப்புப் புரியாமல் அந்தத் தென்னவன் சிறுமலைப் பிள்ளையாண்டானையும், உங்களோடு கூப்பிட்டுக் கொண்டு வந்து விடாதீர்கள்.”

“உங்கள் குறிப்பு எனக்குத் தெரியும்! நான் தனியாகவே வருவேன் என்பதை நீங்கள் நம்பலாம்” என்று காராளர் பெரியவருக்கு உறுதி கூறிவிட்டுப் புறப்பட்டார்.

மீண்டும் அவர் தன் மாளிகைக்குத் திரும்பியபோது செல்வப் பூங்கோதை, தென்னவன் மாறனுக்கும் மல்லனுக்கும் நெய் மணம் கமழும் தேன்குழல்களைக் கொடுத்து உண்ணச் சொல்லி உபசரித்துக் கொண்டிருந்தாள்.

“இவர் தேன் குழலைக் கடித்துத் தின்னும் ஒலி மதுரை வரை கேட்கும் போலிருக்கிறதே அம்மா!” என்று தென்னவன் மாறனைச் சுட்டிக் காட்டிக் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார் காராளர்.

“என்ன செய்வது? களப்பிரர்களை நினைத்துக் கொண்டு தேன்குழல் தின்றால்கூடப் பல்லை நற நற வென்று தான் கடிக்க வேண்டியிருக்கிறது...” என்றான் தென்னவன் மாறன். மல்லனும், செல்வப் பூங்கோதையும், காராளரும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/144&oldid=715351" இலிருந்து மீள்விக்கப்பட்டது