பக்கம்:நித்திலவல்லி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

நித்திலவல்லி / முதல் பாகம்



“ஏன்?”

“அவள் உறுதியாகவும், பயன்படுகிற வகையிலும் திரும்பி வருவாள் என்பது சர்வ நிச்சயம்” என்று அழகன் பெருமாள் நம்பிக்கையாகத் தெரிவித்தான். ‘சூழ்நிலைகளால் எங்கும் வெளியேறிச் செல்ல முடியாதபடி சில நாட்கள் தானும் பிறரும் அந்தக் கணிகை மாளிகையிலேயே தங்க நேர்ந்திருப்பதால், இரத்தினமாலை உடனே திரும்பினாலும் தான் விரைந்து செய்யப் போவது என்ன?' என்று எண்ணித் தனக்குத் தானே பொறுமையடைந்தான் இளையநம்பி. அந்த மாளிகைப் பெண்கள் உபசரிப்பதிலும், விருந்தினரைப் பேணுவதிலும் ஒரு கலையின் மெருகும், நளினமும் பெற்றுத் தேர்ந்தவர்களாக இருந்ததால், அங்கே ஒரு குறையும் தெரியாமல் இருக்க முடிந்தது.

அங்கேயே வைகறை நீராடி முடிந்த இளையநம்பிக்கும், அழகன் பெருமாளுக்கும் பூசிக் கொள்வதற்கு நிறையச் சந்தனம் அரைத்துக் கொடுத்தான் குறளன்.

“சந்தனம் பூசிக் கொள்ளும் மகிழ்ச்சியிலா இப்போது நாம் இருக்கிறோம்?” என்று அதை மறுத்த இளைய நம்பியிடம்

“அப்படிச் சொல்லாதீர்கள் ஐயா! நம் குறளனால் ஒரு பணியும் செய்யாமல் வாளா இருக்க முடியாது. அவனுடைய சந்தனம் அரைக்கும் பணியை நமக்காக அவன் செய்திருக்கிறான். சந்தனத்தை வாங்கிப் பூசிக் கொள்ளுங்கள். நடக்க இருக்கும் காரியங்களைக் கூட மங்கல நிறைவுடையதாக்கி விடும் சக்தி பொதிகை மலைச் சந்தனத்துக்கு உண்டு ஐயா!” என்று பரிவோடு கூறினான் அழகன் பெருமாள், மனத்தை அதிற் செலுத்தும் சூழ்நிலை அப்போது இல்லை என்றாலும், அந்தச் சந்தன மணம் மாளிகையையே நிறைத்துக் கொண்டிருந்தது. இளையநம்பி தயங்குவது போலத் தயங்காமல், மார்பிலும், தோள்களிலும் அழகன் பெருமாள் சந்தனத்தை வாரி வாரிப் பூசிக் கொண்டான். அரைத்துக் கொண்டு வந்து அன்புடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/147&oldid=945298" இலிருந்து மீள்விக்கப்பட்டது