பக்கம்:நித்திலவல்லி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

151



இவர்கள் அளவற்ற சிரத்தையோடு தோன்றுகிறார்கள். உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு எழுதும் போது மட்டும் உன் மேல் தங்களுக்குள்ள பக்தி விசுவாசத்தையே இவர்கள் எழுத்தாக எழுதுகிறார்களோ என்றுகூட நான் நினைப்பதுண்டு’ என்பதாகக் கண்களைச் சுழற்றி என்னைப் பார்த்தபடியே சொன்னாள் அந்தக் களப்பிரப் பெண். நேற்றிரவு மட்டும் அவள் என்னிடம் பழகிய விதம், பேசிய சொற்கள் எல்லாமே சந்தேகப்படத் தக்கதாய் இருப்பது போல் தோன்றியது; அவள் என்னை ஆழம் பார்க்கிறாளோ என்று தயக்கத்தோடு நினைத்துச் சிந்தித்தேன் நான்.”

“அப்படியும் சிந்திக்க வேண்டியதுதான் இரத்தினமாலை! எதிரிகளைப் பற்றி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கணத்திலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்” என்றான் அழகன்பெருமாள். இரத்தினமாலை, மேலும் தொடர்ந்து கூறலானாள்:-

“அந்தக் களப்பிரப் பெண்ணைப் பற்றிச் சந்தேகம் வந்த பின், அவள் கவனத்தை மாற்றுவதற்காக நான் என்ன செய்தேன் தெரியுமா? அவள் கண்காணவே என் கைகளில் எழுதியிருந்த அலங்காரங்களை அழித்தேன். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அந்தக் களப்பிரப் பெண் போய்ச் சேர்ந்தாள். அவள் போய்ச் சேர்ந்த பின் நான் அரண்மனையில் தங்கியிருந்த பகுதியின் கதவுகளை நன்றாக உட்புறம் தாழிட்டுக் கொண்டு, ஊரடங்கிப் போன அந்த இரவு வேளையில் என் முழு நம்பிக்கைக்குரியவர்களும் என்னாலேயே அந்த அரண்மனையில் தொண்டூழியும் புரிவதற்குச் சேர்க்கப்பட்டவர்களும் ஆகிய பணிப் பெண்களைக் கொண்டு என் உள்ளங்கால்களில் எழுதச் செய்தேன். உள்ளங் கால்கள் ஈரம் புலர்கிறவரை காற்றாட நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்படி உட்கார்ந்து ஆடாமல் அசையாமல் இந்த எழுத்துக்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். உறக்கத்தை இழந்ததனாலும் நீண்ட நேரம் கால்களை ஒரே பக்கமாக நீட்டி அமர்ந்திருந்ததனாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/152&oldid=945329" இலிருந்து மீள்விக்கப்பட்டது