பக்கம்:நித்திலவல்லி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

நித்திலவல்லி / முதல் பாகம்



கண்கள் எரிகின்றன. முழங்கால் எலும்புப் பூட்டுகளில் வலி தாங்க முடியவில்லை.”

“எங்களுக்கு உதவுவதற்காக உன் நளினப் பொன்னுடல் மிகவும் நலிவடைய நேர்ந்திருக்கிறது பெண்ணே! இந்த உதவிக்காக நானும், அழகன் பெருமாளும், இன்னும் அழியாமல் எஞ்சியிருக்கும் பாண்டியர் மரபும் உனக்கு எவ்வளவோ நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் இரத்தினமாலை!” இளையநம்பி குறுக்கிட்டுப் பேசியபோது, இந்தப் பேச்சில் ஒன்றிற்காக மகிழ்ச்சியும், வேறொன்றிற்காகச் சினமும் கொள்ள வேண்டும் போலிருந்தது இரத்தின மாலைக்கு. ‘நளினப் பொன்னுடல்’ என்று அந்தக் கம்பீரமான கட்டிளங்காளையின் வார்த்தைகளால் தன் அழகு புகழப்பட்டிருப்பதை அவள் எண்ணிப் பூரித்தாள். அதே சமயத்தில் பாண்டியர் மரபுக்கு ஆதரவான இந்த இயக்கத்தில், நினைவு தெரிந்த நாளிலிருந்து பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆசியோடு ஈடுபட்டிருக்கும் தன்னை அந்நியராக வந்த யாரோ ஒரு புதியவருக்கு நன்றி சொல்லி ஒதுக்குவது போல் அவன் ஒதுக்கியது அவளுக்குச் சினம் ஊட்டியது. அந்த நன்றியின் மூலம் இளையநம்பி தன்னை அவமானப் படுத்திவிட்டது போல் உணர்ந்தாள் அவள். அழகிய பொன் நிறக் கைகளும், பரந்த மார்பும் கட்டிளமையும், ஆண்மையின் காம்பீர்யம் நிறைந்த முகமுமாக எதிரே நின்று கொண்டிருந்த இளையநம்பியைக் கோபித்துக் கொள்ள அவள் பெண்மை தயங்கினாலும் தன்மானம் வென்றது. இவள் அவனை நோக்கிக் கேட்டாள்:

“நன்றியை எதிர்பாராமல் செயல்படும் கடமைகளை நன்றி கூறி விடுவதன் மூலமாகவும் கூட அவமானப்படுத்த முடியும் என்று நீங்கள் அடிக்கடி நிரூபிக்கிறீர்கள் ஐயா!”

“நீ இப்படிச் சொல்லக் கூடாது பெண்ணே! ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்று நம் தமிழ்மறையே கூறுகிறது.”

இளையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு என்று அதே தமிழ்மறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/153&oldid=945330" இலிருந்து மீள்விக்கப்பட்டது