பக்கம்:நித்திலவல்லி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

155



நம்பியோ இந்த எச்சரிக்கைகளைப் பற்றி ஓரளவு அலட்சியம் காண்பித்தான்.

“இந்த ஆண்மையற்ற எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தத் தொடங்கினால், நாம் நெடுங்காலம் இன்னிசையைச் செவிமடுத்துக் கொண்டும், ஆடல் அபிநயங்களை இரசித்துக் கொண்டும், இந்தக் கணிகை மாளிகையிலேயே முடங்கிக் கிடந்து, நாட்களைக் கழிக்க வேண்டியதுதான். ‘இன்னும் திரும்பி வந்து சேராத உப வனத்து நண்பர்கள் சிறைப்பட்டு விட்டார்களா, இல்லையா, அவர்கள் நிலை என்ன?’ என்பதையெல்லாம் கூட அறியவே முடியாது. வீரர்கள் அபாயங்களின் இடையேயும் வெளிப்பட்டு அவற்றை எதிர்கொள்வதுதான் முறை. அலை ஓய்ந்த பின் கடலாட முடியாது. அலை ஓயப் போவதும் இல்லை” என்று கோபம் வெளிப்படையாகத் தெரிகிற குரலிலேயே பேசினான் இளையநம்பி. அழகன் பெருமாளும், இரத்தினமாலையும் இதை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. இளையநம்பி சூழ்நிலையின் அபாயங்களை நன்றாக உணரவில்லை என்றே அவர்கள் கருதினார்கள்.

அழகன் பெருமாள் சாந்தமான குரலிலேயே இளைய நம்பிக்கு மறுமொழி கூறினான்:-

“ஐயா! உலகியல் அனுபவம் அதிகமுள்ளவன் என்ற முறையில் நான் கூறுவதை நீங்கள் சிறிது பொறுமையாகக் கேட்க வேண்டும். அபாயங்களை வெல்ல வேண்டும் என்ற ஆசையில் அபாயங்களிலேயே போய்ச் சிக்கிக் கொண்டு விடக் கூடாது. அலை ஓய்ந்து நீராட முடியாதுதான், என்றாலும் நீராடுவதற்காக அலைகளிலே போய்ச் சிக்கிக் கொண்டு அழிந்து விடக் கூடாது. அந்துவன் மூலமோ, அரண்மனையில் இருக்கும் நம்மைச் சேர்ந்த ஒற்றர்கள் மூலமோ, மீண்டும் நற்குறிப்பு அறிவிக்கப்படுகிற வரை நாம் இந்த மாளிகையில்தான் மறைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், பல நாளாக முயன்று செய்த எல்லாச் செயல்களும் பாழாகிவிடும். நம்முடைய அந்தரங்கமான பல செய்திகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/156&oldid=945313" இலிருந்து மீள்விக்கப்பட்டது