பக்கம்:நித்திலவல்லி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

159



அவளை அவனால் வெறுக்கவும் முடியவில்லை. தவிர்க்கவும் முடியவில்லை. அவன் வழியின் குறுக்கே அவள் நின்றாள். துணிவாகவும், வாதத் திறமையுடனும், நேருக்கு நேர் நின்று பேசிவிட்டாள் என்பதற்காக ஒருத்தியை வெறுப்பது நியாயமில்லை என்று அவன் மனத்திற்கே புரிந்தாலும், சுளீரென்று அறைந்தாற் போல் அவள் கூறிய வார்த்தைகளின் சூடு இன்னும் ஆறாமல் அவன் செவிகளில் இருக்கத்தான் செய்தது. அதை அவனால் மறக்கவே முடியவில்லை.

அவள் பேசியிருந்த வார்த்தைகள் அவனுடைய நெஞ்சின் மென்மையிலே இன்னும் உறுத்திக் கொண்டிருந்தன. அவள் கண்களின் பார்வையும், சிரிப்பின் நளினமும் அவனைச் சினம் அடைய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. அவள் அவன் முன் மண்டியிட்டு மன்றாடத் தொடங்கியிருந்தாள்.

கடைந்தெடுத்துத் திரட்டிய வெண்ணெயாற் செய்தது போன்ற மென்மையும், குளிர்ச்சியும் வாய்ந்த இரத்தினமாலையின் கைவிரல்களைத் தன் பாதங்களின் மேல் உணர்ந்தான் அவன். வாதிடுவதில் இருந்த உறுதி வணங்குவதிலும் இருந்ததைக் கண்டு, ஒரு கணம் அவன் அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் தயங்கினான். தன்னுடைய வார்த்தைகளுக்குப் பதில் வார்த்தைகள் சொல்லி, உடனே குத்திக் காட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் அவள் இப்படிப் பேசியிருந்தாலும், இப்படிப் பேசுவதற்கு முன் அவள் தனக்காகச் சாதித்துக் கொண்டு வந்திருந்த சாதனைகளை அவனும் மதித்தே ஆக வேண்டியிருந்தது. சாதனைகள் மறுக்க முடியாமல் இருந்தன.

இறுதியில் வெற்றி பெற்றது அவள்தான். கால்களைப் பற்றிக் கொண்டு, அவனிடம் மன்றாடி அவன் அங்கிருந்து வெளியேற முடியாதபடி தடுத்து விட்டாள் அவள். ஒரு கணிகையிடம் இருந்தே தீர வேண்டிய திறமைகள் அவளிடம் குறைவின்றி இருப்பதை இப்போது அவனால் நன்றாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/160&oldid=945296" இலிருந்து மீள்விக்கப்பட்டது