பக்கம்:நித்திலவல்லி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

161

கொண்டு, கூடல் மாநகரின் கணிகையர் வீதியில் ஓர் இல்லத்தில் இப்படி அகப்பட்டுப் போகவா என் தலையில் எழுதியிருக்கிறது? எதற்காக, யாருக்காக பயந்து நான் இங்கே அடைந்து கிடக்கவேண்டும்? ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. இந்த நாட்டுப் பண்பாடு, சாவை வாழ்வின் முடிவாக ஒப்புக் கொள்வதில்லை. ஒரு வாழ்வின் முடிவுதான் மரணம் என்றால், இன்னொரு வாழ்வின் தொடக்கம்தான் சாவு. உடலும் ஆன்மாவும் சேர்ந்து உலகை அனுபவிப்பது ஒருவிதமான வாழ்க்கை என்றால், உடலை இழந்து ஆன்மாவினால் மட்டும் உலகை அனுபவிப்பதும்கூட மற்றொரு வகையாகத் தான் இருக்கவேண்டும்! அப்படிப் பட்ட வாழ்வைக் களப்பிரர் கூட்டத்துக்குத் தரவேண்டும். முடியாவிட்டால் நானே அடையவேண்டும்’ என்று எண்ணினான் அவன். நாட்கள் கழியக் கழிய அந்த மாளிகையின் இசை ஒலி சலிப்பூட்டியது. பகலும் இரவும் அர்த்தமில்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தன. அழகன் பெருமாளும் அவனும் பேசுவதற்குப் பொதுவாக எந்த விஷயமும் இல்லை. அவனோடு எதைப் பேசினாலும் அது ஒரு விவாதத்துக்குத் தோற்றுவாயாகவே முடிவது வழக்கமாகி இருந்தது. குறளன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தனத்தை அரைத்துக் குவித்து அந்த மாளிகையையே மணக்கச் செய்து கொண்டிருந்தான். நாட்கள் பேச்சற்ற ஊமைகளாய் இயக்கமற்று, முடம் பட்ட பொழுதுகளை உடையவையாய்க் கழிந்து கொண்டிருந்தன. ஒருநாள் அந்த மாளிகையின் மற்றொரு பகுதியில் அடுக்கியிருந்த தமிழ் ஏட்டுச் சுவடிகளை அவனுக்குக் காண்பித்தாள் இரத்தின மாலை. பழந்தமிழ் இலக்கியங்கள் அடங்கிய அந்தச் சுவடி களைப் பார்த்ததும் அவனுக்கு நான்மாடக்கூடல் நகரத்தின் புகழ்பெற்ற தமிழ்ச் சங்கம் நினைவு வந்தது. களப்பிரர் ஆட்சியில் தமிழ் மொழியும், தமிழ்ப் புலவர்களும், தமிழ் நாகரிகமும், தமிழ்ச் சங்கமும் பொலிவுடனோ, புகழுடனோ இராதென்று தானே கணித்துக்கொள்ள முடிந்தாலும்

நி.வ-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/162&oldid=715359" இலிருந்து மீள்விக்கப்பட்டது