பக்கம்:நித்திலவல்லி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

நித்திலவல்லி / முதல் பாகம்



கோநகரிலேயே வாழும் கணிகை இரத்தினமாலையிடம் அதைப்பற்றித் தெரிந்து கொள்ளக் கருதி அவளை வினவினான் இளையநம்பி:

“களப்பிரர் ஆட்சியில் தமிழ்ச் சங்கத்தாரும், சங்கமும், புலவர்களும் என்ன ஆனார்கள்? நான் கோநகருக்கு வந்த பின்பு உன்னிடமோ, அழகன் பெருமாளிடமோ சங்கத்தைப் பற்றியும் அதன் புகழ்பெற்ற புலவர்களைப் பற்றியும் இதுவரை இங்கே எதுவுமே கேள்விப்படவில்லை!”

“ஏதாவது இருந்தால் அல்லவா கேள்விப்படுவதற்கு? கபாடபுரத்திலும், தென் மதுரையிலும் இருந்த புகழ் பெற்ற தமிழ்ச் சங்கங்களை எல்லாம் கடல்கோள் அழித்தது என்றால், இதைக் களப்பிரர் ஆட்சியே அழித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு புலவர்கள் அமர்ந்திருந்த மண்டபங்களில், களப்பிரர்கள் இப்போது தங்கள் குதிரைகளைக் கட்டி இருக்கிறார்கள். ஏடுகளும், சுவடிகளும் குவித்திருந்த இடங்களில் எல்லாம் வாள்களையும் வேல்களையும் குவித்து விட்டார்கள். ஓலைகளில் எழுத்தாணிகள் கீறிய ஒலிகள் கேட்ட இடமெல்லாம் பாலிமொழி இன்று ஒலிக்கத் தொடங்கி விட்டது.”

"ஆயிரங்காலத்து மொழி அழியும்போது, அதை ஒட்டி வளர்ந்த எல்லா நாகரிகமும் நலியத்தான் வேண்டும் போலிருக்கிறது.”

“நலிந்தாலும், வளர்ந்தாலும் அது எதிர்காலத்திற்கு வரலாறு ஆகிறது. தமிழ் நாகரிக வரலாற்றில், தங்கள் காலத்தின் அடிமை முத்திரையாகக் களப்பிரர்கள் இருளைப் பூசியிருக்கிறார்கள்.”

“இரத்தினமாலை! இருளை எப்போதும் நான் முடிந்த முடிவாக ஒப்புக் கொண்டு ஏற்பதில்லை. ஒவ்வோர் இருட்டுக்குப் பின்பும் ஒரு வைகறை உண்டு என்று திடமாக நம்புகிறவன் நான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/163&oldid=945295" இலிருந்து மீள்விக்கப்பட்டது