பக்கம்:நித்திலவல்லி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

நித்திலவல்லி / முதல் பாகம்



கைகால் பதறி நடுங்கக் குறளன் தூக்கம் கலைந்து, சிவந்த கண்களோடு அவர்கள் எதிரே வந்து நின்றான்.

உடனே பேசுவதற்குச் சொற்கள் வராமல், சந்தனம் அரைக்கும் பகுதியைச் சுட்டிக் காட்டிப் பயத்தோடு வார்த்தைகளை அரற்றினான் அவன். உடனே விளையாட்டை நிறுத்தி விட்டு மூவருமே எழுந்து விட்டனர். அவனோடு சந்தனம் அரைக்கும் பகுதிக்குச் சென்றதும், அங்கே நடுவாக இருந்த சந்தனக் கல்லருகே காதை வைத்து உற்றுக் கேட்டு விட்டு, அழகன் பெருமாளையும் கீழே படுத்தாற் போல் சாய்ந்து அதைக் கேட்கச் சொல்லிச் சைகை செய்தான் குறளன். நால்வரிடையேயும் எதையோ எதிர் பார்க்கும் பேச்சற்ற மெளனம் வந்து சூழ்ந்தது. அழகன் பெருமாள் சந்தனக் கல்லை ஒட்டிச் செவியைச் சாய்த்துக் கேட்ட பின் இளையநம்பியையும் அப்படியே கேட்குமாறு குறிப்புக் காட்டினான். அவனும் அவ்வாறே செய்தான். பின்பு இரத்தினமாலையும் கீழ்ப்பக்கமாகக் குனிந்து உற்றுக் கேட்டாள்.

கீழே நிலவறைப் படிகளில் யாரோ நடக்கும் ஒலி கேட்டது. அப்படி நடப்பவர் வேண்டியவராகவோ, வழி தெரிந்தவராகவோ இருந்தால் அடையாளமாகக் கல்லைத் தூக்கிக் கொண்டு மேலே வந்து விட முடியும். அப்படி வராமல் கீழேயே நடப்பதிலிருந்து, அந்நியன் யாரேனும் வந்து விட்டானோ என்ற பயம் அவர்களைச் சூழ்ந்தது. ஒருவனுடைய காலடி ஓசைதான் கேட்கிறது என்றாலும், பின்னால் வரிசையாகப் பல பூத பயங்கரப் படை வீரர்கள் நிற்கலாமோ என்று அழகன் பெருமாளின் கற்பனையில் ஒரு சந்தேகம் மருட்டியது. பல நாட்களாக அந்த வழியின் மூலம் அங்கே யாரும் வராததாலும், வந்திருப்பவரும் உடனே அடையாளமாக மேல் வாயிலின் மூடு கல்லைத் தூக்காமல் கீழே படிகளிலேயே தடம் தெரியாமல் நடமாடுவதாலும் அவர்கள் சந்தேகப்படுவதற்கும், தயங்குவதற்கும், பயப்படுவதற்கும் நிறைய நியாயமிருந்தது. ஒரு தாக்குதலை எதிர் கொள்ள ஆயத்தமாக வேண்டிய நிலையில் அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/167&oldid=945309" இலிருந்து மீள்விக்கப்பட்டது