பக்கம்:நித்திலவல்லி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

நித்திலவல்லி / முதல் பாகம்



மாற்றியிருந்தாள். அவன், அவளுடைய இதயத்தின் யாழ் ஒலியை இன்னும் நெருங்கிக் கேட்க முடியாதபடி அழகன் பெருமாளும், குறளனும், மாந்திரீகன் செங்கணானும் அருகில் இருந்தார்கள்.

ஆயிரம் பேர் அருகிலிருந்தாலும், புரிகிறவனுக்கு மட்டும் புரிய வைக்கும் நயமான வார்த்தைகளில் பேசும் சாகஸம் அந்த இளம் கணிகையிடம் இருந்தது. சொற்களைக் கவியின் நயத்தோடு தொடுத்துத் தொடுத்து அனுப்புகிற வித்தையை அவள் கற்றிருப்பது போல் தோன்றியது. மனத்தினால் தங்களுக்கு இடையே ஏதோ புரிவது போலவும், நெருங்குவது போலவும் உணர்ந்தான் இளையநம்பி. ஒரு வெறுப்பின் முடிவு இவ்வளவு பெரிய பிரியமா என்று நினைத்த வேளையில், தான் சுலபமாகத் தோற்றது எப்போது என்று அவனுக்கே புரியவில்லை. தோற்றிருக்கிறோம் என்பது மட்டும் புரிந்தது. வென்றவள் மேல் சீறவோ, சினம் கொள்ளவோ முடியாமல் இருந்ததுதான் ஏனென்று அவனுக்கே தெரியவில்லை.

அன்று மாலை அவள் இருந்த வளமுடையார் கோவிலுக்குச் சென்று வர அவர்கள் எல்லோரும் இணங்கினார்கள். அந்துவனைக் காணவும் அவனிடமிருந்து ஏதாவது தெரிந்தால் அதை அறிந்து வரவும் அவள் சென்று வருவதில் தவறில்லை என்றே இளையநம்பிக்கும் தோன்றியது இப்போது.

இரத்தினமாலை தன் வலது கையில் பூக் குடலையோடு பணிப் பெண் பின் தொடரப் புறப்பட்ட போது--

“இருந்த வளமுடைய பெருமாளிடம் இன்று என்ன வரம் வேண்டுவதாக உத்தேசமோ?" என்று அவளைக்கேட்டான் இளையநம்பி. அவள் அவனை ஏறிட்டுப் பார்த்து முக மலர்ந்தாள். பின்பு நிதானமாக மறுமொழி கூறினாள்:-

“நேற்று வரை ‘நாட்டைக் களப்பிரர்களிடமிருந்து காப்பாற்று’ என்று வேண்டுவதைத் தவிர வேறு சொந்த வரம் எதற்கும் என்னிடம் விருப்பமின்றி இருந்தது. இன்று அதற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/177&oldid=945293" இலிருந்து மீள்விக்கப்பட்டது