பக்கம்:நித்திலவல்லி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



31. கனவும் நினைவும்

இரத்தினமாலையின் அந்த அன்பையும், விநயத்தையும் உடனே விரைந்து எதிர் கொண்டு உபசரிக்கும் பொருத்தமான பதங்களும், உரையாடலும் கிடைக்காத காரணத்தால் உள்ளம் மலர்வதன் உவகையை முகத்திற் காட்டும் மிகச் சிறந்த மொழியாகிய முறுவலை அவளுக்குப் பதிலாக அளித்து விடை கொடுத்தான் இளையநம்பி. மனத்தின் களிப்பை வெளியிடும் ஆயிரம் பதங்கள் மொழியில் இருக்கலாம். ஆனால் அவை ஓர் அழகிய முகத்தின் முறுவலை இன்னோர் அழகிய முகத்தின் முறுவலால் சந்திக்கும் சுகத்துக்கு ஈடாவதில்லை என்று தோன்றியது. மனம் நெகிழ்ந்து கனிந்து பிறக்கும் ஒரு சிரிப்பை அதே நெகிழ்ச்சியும், கனிவும் உள்ள இன்னொரு சிரிப்பால் தான் உபசரிக்க முடியும் என்பதை அப்போது இளையநம்பி மிக நன்றாக உணர்ந்திருந்தான். தேர்ந்த கவியின் சொற்கள் ஒவ்வொருமுறை நினைக்கும் போதும் ஆராயும் போதும் ஒரு புது நயத்தையும், பொருளையும் தருவது போல் இரத்தின மாலையின் புன்னகை அவன் சிந்தனையில் புதுப்புது அணி நயங்களை அளித்துக்கொண்டிருந்தது. அவளை இருந்த வளமுடையார் கோவிலுக்கு[1] வழியனுப்பி விட்டு இளையநம்பியும், அழகன் பெருமாளும், குறளனும் பணிப் பெண்களும் மாளிகைக்குள்ளே திரும்பினர். பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு உடனே அந்த மாளிகையின் கதவுகள் உட்புறமாகத் தாழிட்டு அடைக்கப்பட்டன. உள்ளே


  1. இப்போதுள்ள கூடலழகர் கோவில் இந்தக்கதை நிகழும் காலத்து மதுரையில் இருந்த வளமுடையார் கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. ஆதாரம் :- சிலம்பு அரும்பதவுரை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/179&oldid=715372" இலிருந்து மீள்விக்கப்பட்டது