பக்கம்:நித்திலவல்லி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

179


திரும்பியதும் உடனே இளையநம்பியும் அழகன் பெருமாளும் தேனூர் மாந்திரீகன் படுத்த படுக்கையாகக் கிடந்த கட்டிலருகே சென்று அமர்ந்தனர். குறளன் நிலவறை முனையைக் காவல் புரிவதற்காகச் சந்தனம் அறைக்கும் பகுதிக்குச் சென்றான். முதல் நாளிரவு உறக்கம் இல்லாமற் கழித்திருந்த காரணத்தால் இளைய நம்பிக்கு மிகவும் களைப்பாக இருந்தது. மாந்திரீகன் செங்கணானோடு ஆறுதலாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் அங்கேயே அருகிலிருந்த மஞ்சம் ஒன்றில் போய்ச் சாய்ந்தான் இளையநம்பி. அவன் உடல் மிகவும் அயர்ந்து போயிருந்தது. படுத்த சில கணங்களிலேயே அவன் விழிகளும் நினைவும் சோர்ந்து உறங்கி விட்டான். அழகன் பெருமாளும், தேனூர் மாந்திரீகனும் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தனர். மெல்ல மெல்ல அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த சொற்கள் அவன் செவிகளில் மயங்கி ஒலித்தன. தன்னை மறந்து உறக்கத்தில் இளைய நம்பி ஒரு கனவு கண்டான்.

ஒளிவீசும் முத்துக்களாலும், மணிகளாலும் அலங்கரிக்கப் பட்டதும், மகாமேரு மலையைப் போல பொன்மயமாக உயர்ந்ததுமான ஒரு பெரிய மாளிகையின் படிகளில் ஏறி உள்ளே நுழைவதற்காக வாயிலருகே நின்றுகொண்டிருந்தான் இளையநம்பி. ஏதோ ஞாபகத்தில் வாயிற் கதவுகளைக் கடந்து அந்த மாளிகைக்குள் நுழையுமுன் அவன் திரும்பிக் கீழ் முகமாகத் தான் ஏறிவந்த படிகளைப் பார்க்கிறான். பார்த்ததும் அவன் கண்களும் கால்களும் தயங்கின. கீழே கடைசிப் படியில் கணிகை இரத்தினமாலை தலைவிரி கோலமாக நிற்கிறாள். காடாய் அவிழ்ந்து தொங்கும் கருங்கூந்தலின் நடுவே அவளுடைய எழில்முகம் மேகங்களின் நடுவே நிலவு பூத்தாற்போல் வனப்பு மிகுந்து காட்சியளித்தது.

அவன் பார்த்தபின்பும் அவள் அந்த முதற்படியிலேயே தயங்கி நின்று கொண்டிருந்தாள். மைதீட்டிய அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/180&oldid=715373" இலிருந்து மீள்விக்கப்பட்டது