பக்கம்:நித்திலவல்லி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

நித்திலவல்லி / முதல் பாகம்



விழிகளில் ஏக்கம் உலவிக் கொண்டிருப்பதை அவன் காண முடிந்தது. அவளுடைய சிறிய அழகிய இதழ்கள் அவனிடம் ஏதோ பேசுவதற்குத் துடித்துக் கொண்டிருந்தன. கோவைக் கனிகளைப் போன்ற அந்தச் செவ்விதழ்கள் அவள் முகத்தில் துடிப்பது, மிக மிகத் தனியானதொரு கவர்ச்சியை உடையதாயிருந்தது. அப்படியே கீழே இறங்கி ஓடிப் போய் அந்த முகத்தைத் தன் முகத்தோடு அணைத்துக் கொண்டு அதன் மென்மையையும், வெம்மையையும் அளந்தறிய வேண்டும் போல அவ்வளவு ஆவலிருந்தும், தான் ஏறி வந்து விட்ட படிகளின் உயரத்திலிருந்து மீண்டும் திரும்பிக் கீழே இறங்கிப் போக முடியாமல், ஏதோ தன்னைத் தடுப்பதையும் அவன் உணர்ந்தான். அப்படித் தன்னைத் தடுப்பது எது என்பதையும் அவனால் உடனே புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வேளையில் கீழேயிருந்து சோகம் கன்றிய குரலில் கதறுவது போல் உரத்த குரலில் அவள் அவனைக் கேட்கிறாள்:

“ஐயா! நான் இன்னும் கீழே தரையில்தான் இருக்கிறேன், நீங்களோ முத்துகளும் நவரத்தினங்களும் நிறைந்திருக்கிற எட்ட முடியாத உயரத்துக்குச் சென்று விட்டீர்கள்...”

“இல்லை! இல்லை! என்னுடைய விலை மதிப்பற்ற முத்து இன்னும் தரையில்தான் இருக்கிறது. நான் ஒளி நிறைந்ததாகக் கருதும் இரத்தினம் இன்னும் பூமியில்தான் இருக்கிறது பெண்ணே"-- என்று உரத்த குரலில் தன் உயரத்திலிருந்து அவளுக்குக் கேட்கும்படிக் கதறினான் அவன். அந்தக் குரல் அவளுக்குக் கேட்டதோ இல்லையோ?

இவ்வளவில் யாரோ அவன் தோளைத் தீண்டி எழுப்பவே அவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். உடல் முழுவதும் குப்பென்று வேர்த்திருந்தது.

“வாய் அரற்றுகிற அளவு ஆழ்ந்த உறக்கம் போலிருக்கிறதே!” என்று வினாவியபடியே அழகன் பெருமாள், அவனது மஞ்சத்தின் அருகில் நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/181&oldid=945288" இலிருந்து மீள்விக்கப்பட்டது