பக்கம்:நித்திலவல்லி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

185



“அகநகரின் நிலை மிகமிகக் கடுமையாகி இருக்கிறது! என்னுடைய பணிகளைப் பாராட்டி அரண்மனை அந்தப்புர மகளிர் மூலம் நான் பெற்றிருக்கும் முத்திரை மோதிரத்தைக் கையில் அணிந்து சென்றதனால் தான், நானே பாதுகாப்பாக இருந்த வளத்துக்குச் சென்று திரும்ப முடிந்தது. எங்கும் ஒரே பரபரப்பும் பதற்றமும் நிறைந்து அகநகர வீதிகளும், சதுக்கங்களும் அமைதி இழந்திருக்கின்றன. சந்தேகப்படுகிறவர்களை எல்லாம் இழுத்துப் போய்க் களப்பிரர்கள் கழுவேற்றுகிறார்கள். எல்லாரையும் பயம் பிடித்து ஆட்டுகிறது. நான் இருந்த வளமுடையார் கோவிலுக்குப் போய் யானைக் கொட்டாரத்தை அடைந்த போது அந்து வனைக் கொட்டாரத்தின் வாயிலிலேயே பார்த்தேன். அவன் வேறு சில யானைப் பாகர்களோடு சேர்ந்து நின்று கொண்டிருந்தான். ஆனால் என்னைப் பார்த்த பின்பும் அவன் என்னோடு பேசவோ தெரிந்தவன் போல் முகம் மலரவோ இல்லை. மற்ற யானைப் பாகர்களோடு பாலி மொழியில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான் அவன். நிலைமையை நான் விளங்கிக் கொண்டேன். எதையும் தெரிந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. ஏமாற்றத்தோடு, ஆலயத்திற்குள்ளே சென்று நான் கொண்டு போயிருந்த மாலைகளைச் சாற்றச் செய்து, இருந்த வளமுடையாரையும், அந்தரவானத்து எம் பெருமானையும் வழிபட்டு வணங்கித் திரும்பும் போது, மீண்டும் அந்துவனைக் காண முயன்று வெகு நேரம் காத்திருந்தேன். அர்த்த சாம வேளை கூட நெருங்கி விட்டது. என்ன முயன்றும், அந்துவனைக் காண முடியவில்லை. வந்த காரியத்தை இறைவனிடம் விட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்த மனத்துடன் குடலையும் கையுமாகப் பணிப் பெண்ணோடு நான் திரும்புவதற்கு இருந்தேன். அப்போது விண்ணகரத் திருக்கோயிலைச் சேர்ந்த நந்தவனத்து மாலை கட்டி ஒருவன், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கைகளில் ஒரு பெரிய திருத்துழாய் மாலையோடு என்னை நோக்கி வந்தான்.

"இருந்த வளமுடைய பெருமாளின் திருவருள் இந்த மாலையில் நிரம்பியிருக்கிறது! தாங்கள் நினைப்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/186&oldid=945286" இலிருந்து மீள்விக்கப்பட்டது