பக்கம்:நித்திலவல்லி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

189



அந்த ஓலையை அழகன் பெருமாள் படித்த பின்பு இரத்தினமாலையிடம் கொடுத்தான். இரத்தினமாலையும் படித்த பின்பு மீண்டும் அது இளைய நம்பியின் கைகளுக்கே வந்து சேர்ந்தது. திருத்துழாய் நறுமணம் கமழும் அந்த ஓலையை இரண்டாவது முறையாகவும் படித்தான் அவன். கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்ட பின் பல நாட்களாக அந்தக் கணிகை மாளிகையிலேயே இருந்து விட்டதினால், ஓலையில் குறிப்பிட்டிருக்கும் சூழ்நிலைகளை உணரவும் அநுமானம் செய்யவும் முடியாமல் இருந்தது.

‘பெரியவர் மதுராபதி வித்தகர் ஏன் இப்போது மோகூரில் இல்லை? அவர் எங்கே இருக்கிறார் என்று தேடும் முயற்சியில் நாங்கள் ஏன் ஈடுபடலாகாது?’

‘தென்னவன் மாறனையும் திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் யார் எப்போது எதற்காகச் சிறைப் பிடித்தார்கள்?’

ஒன்றும் விளங்காமல் மனம் குழம்பினான் இளைய நம்பி. அப்போது இரத்தினமாலை சிரித்த முகத்தோடு அவனைக் கேட்டாள்:-

“பார்த்தீர்களா? திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரரைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்த ஓலையும் எங்களுக்கு நினைவூட்டுகிறது. அன்றொரு நாள் கோபித்துக் கொண்டு புறப்பட்டது போல் இனி நீங்கள் இங்கிருந்து எங்கள் பாதுகாப்பை மீறி எங்கும் புறப்பட முடியாது!”

“என்னைப் பாதுகாப்பதில் உங்களுக்குள்ள அக்கறை பற்றி மகிழ்ச்சி. ஒருவரைப் பாதுகாப்பதற்கும், சிறை வைப்பதற்கும் உள்ள வேறுபாடு மட்டும் உங்களுக்கு நினைவிருந்தால் போதும். சில சமயங்களில், நீயும் அழகன் பெருமாளும் செய்கிற காரியங்கள் மூலம் நான் பாதுகாக்கப் படுகிறேனா, சிறை வைக்கப்பட்டிருக்கிறேனா என்பதே சந்தேகத்துக்கு உரியதாகி விடுகிறது.”

“பாதுகாப்பதும் கூட ஒரு வகைச் சிறைதான்! பாதுகாக்கிறவர், பாதுகாக்கப்படுகிறவர், இருவரில் யாருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/190&oldid=945284" இலிருந்து மீள்விக்கப்பட்டது