பக்கம்:நித்திலவல்லி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

நித்திலவல்லி / முதல் பாகம்


அன்பு அதிகம், யாருடைய உரிமை அதிகம், என்பதைப் பொறுத்தே சிறையா இல்லையா என்பது நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இங்கே நாங்கள் உங்கள் மேல் உயிரையே வைத்து அன்பு செலுத்துகிறோம். நீங்கள் பதிலுக்கு எந்த அளவு அன்பு செலுத்துகிறீர்கள் என்பதை எதிர்பாராமலும் கணக்கிடாமலுமே உங்கள் விருப்பம் போல் பழக உரிமைகள் அளித்திருக்கிறோம். இப்போது சொல்லுங்கள் இது சிறையா அன்புப் பாதுகாப்பா?”

“அன்பு என்பது நிறுவைக்கும், அளவைக்கும் அப்பாற்பட்டது இரத்தினமாலை! இப்போது அதை நிறுக்கவும் அளக்கவும் நீ விரும்புவதாகத் தெரிகிறது...”

“அல்லவே அல்ல, செய்வதையும் செய்து விட்டுக் குற்றத்தை என் தலையில் சுமத்தாதீர்கள்! நான் பாதுகாக்கப் படுகிறேனோ, சிறை வைக்கப்பட்டிருக்கிறேனோ, என்று முதலில் வினாவியதே நீங்கள்தான். நீங்கள் வினாவியதற்கு நான் மறுமொழி கூறினால் என்னையே குறை சொல்கிறீர்களே?”

இரத்தினமாலையின் இந்தப் பேச்சுக்கு இளையநம்பி மறு மொழி எதுவும் கூறவில்லை என்றாலும் குறும்பாகவும் அங்கதமாகவும்[1] தான் கூறிய ஒரு பேச்சு அவள் மனத்தின் உணர்வுகளை இவ்வளவு பாதித்திருக்கும் என்றும் அவன் எதிர்பார்க்கவோ, நினைக்கவோ இல்லை.

சிறிது நேர மெளனத்துக்குப் பின்னர் அவர்கள் உரையாடல், ஓலையில் கண்டிருந்த பிற செய்திகளைப் பற்றித் திரும்பியது. இளையநம்பி அழகன் பெருமாளை நோக்கி வினவினான்:-

“இந்த ஓலையின் இரண்டாவது வாக்கியத்தில் குறிப்பிட்டிருக்கும் தென்னவன் மாறனையும், திருமோ கூர்மல்லனையும் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, அழகன் பெருமாள் அவர்கள் எப்படிச் சிறைப்பட்டிருப்பார்கள்,


  1. குத்தலாகவும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/191&oldid=716219" இலிருந்து மீள்விக்கப்பட்டது