பக்கம்:நித்திலவல்லி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

நித்திலவல்லி / முதல் பாகம்



இனிமையாக யாழ் வாசிப்பதற்கென்றே படைக்கப் பட்டாற் போன்ற அவளுடைய மெல்லிய நீண்ட பொன் விரல்களைத் தன் விரல்களோடு இணைத்துக் கொண்டான் அவன். இணைப்பிற்கும் அணைப்பிற்கும் ஆளான கைகளை விட்டுவிடாமல்,

“இந்தக் கைகளில் சந்தனம் மணக்கிறது பெண்ணே!'-- என்று மெல்லிய குரலில் அவள் செவியருகே கூறினான் அவன். பொன்னாற் செய்த பேரியாழ் போன்ற அவள் உடல் இப்போது இளையநம்பியின் அரவணைப்பில் இருந்தது. அவள் இனிய குரலில் அவன் கேட்க உழற்றினாள்:-

“இந்தப் பரந்த மார்பிலும், தோள்களிலும் என் கைகளினால் அள்ளி அள்ளிச் சந்தனம் பூச வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது அன்பரே!”

“சந்தனத்திற்கு வேறெங்கும் போக வேண்டாம் இரத்தின மாலை! உன் கைகளே சந்தனத்தால் ஆகியவைதான். உன் கைகள் மணக்கின்றன. மணக்க வேண்டிய கைகள், இப்படித்தான் மணக்கும் போலிருக்கிறது.”

“எங்கே, அந்த வார்த்தைகளை என் செவி குளிர இன்னொரு முறை சொல்லுங்களேன்.”

“மணக்க வேண்டிய கைகள், இப்படித்தான் மணக்கும் போலிருக்கிறது!...” ஓரக் கண்களால் அவளை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான் அவன். ‘உனக்குத் தோற்றுவிட்டேன்'- என்பது போலிருந்தது அந்தச் சிரிப்பு. அவன் அவளைக் கேட்கலானான்:-

“இந்த மாளிகையில் நுழைந்த முதற் கணத்திலிருந்து நீ என்னை அதிகமாகச் சோதனை செய்திருக்கிறாய் பெண்ணே! நான் உன் மேல் காரணமே புரியாத வெறுப்போடு இங்கே வந்தேன். காரணம் புரியா வெறுப்பு, எல்லையற்ற அன்பாக முடிவதும், காரணம் புரியாத அன்பு, எல்லையற்ற வெறுப்பாக முடிவதும், ஏனென்றே விளங்காத உலகம் இது! உன்னைப் போல் பெண்களின் விழிகளைக் கவிகள் வேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/197&oldid=945282" இலிருந்து மீள்விக்கப்பட்டது