பக்கம்:நித்திலவல்லி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

197


நுனிக்கு உவமை சொல்லுவார்கள். இத்தனை ஆண்டுகளாக நான் கட்டிக் காத்த உறுதியையும், ஆணவத்தையும், ஆசாரங்களையும் உன் கண்களாகிய வேல்கள் இன்று கொலை செய்துவிட்டன.”

“நீங்கள் மட்டும் நிரம்ப நல்லவர்போல் பேசி முடித்து விடவேண்டாம்! இங்கு வந்ததிலிருந்து என்னைக் கொல்வது போன்று நீங்கள் எத்துணை வார்த்தைகளைக் குத்திக் காட்டிப் பேசியிருக்கிறீர்கள்.-”

“உன் பங்குக்கு நீயும் என்னிடம் அப்படிப் பேசியிருக்கும் சமயங்களை மறந்துவிடாதே பெண்ணே!”

“இருவருமே மறக்க வேண்டியவற்றை மறந்துவிட்டவற்றை நீங்கள்தான் இப்போது மீண்டும் எடுத்துக்காட்டி நினைவூட்டுகிறீர்கள்.”

“போகட்டும்! எல்லாவற்றையும் மறந்துவிடலாம். இப்போது, இந்த நிலையில் அழகன் பெருமாளோ, தேனூர் மாந்திரீகனோ, குறளனோ நம்மைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் இரத்தினமாலை?”

“எதுவும் வேறுபாடாக நினைக்கமாட்டார்கள். மனமார வாழ்த்துவார்கள். வந்த நாளிலிருந்து குறளன் அறைத்துக் குவிக்கும் சந்தனத்துக்கு இன்று பயன் கிடைக்கிறதே என்று அவன் மகிழ்ச்சி அடையக்கூடும். வந்த நாளிலிருந்து நீங்கள் காரணமின்றி என்னை வெறுப்பதை மன வருத்தத்தோடு கண்ட அழகன்பெருமாள் உங்கள் மன மாற்றத்தை விழாக் கண்டதுபோல வரவேற்கலாம்!”

“பொய்! அவ்வளவும் பொய்.. வேண்டும் என்றே அழகன்பெருமாளைத் தேனூர் மாந்திரீகனுக்கருகே உறங்கச் செய்து நான் மேல் மாடத்தைத் தேடி உன்னோடு வரச் சதி செய்திருக்கிறாய் நீ! உண்மையா, இல்லையா?”

“காதல் சம்பந்தமான சதிகள் செய்யப்படுவதில்லை. அவை பெரும்பாலும் நேர்கின்றன.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/198&oldid=716221" இலிருந்து மீள்விக்கப்பட்டது