பக்கம்:நித்திலவல்லி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

19


“நீங்கள் பூத பயங்கரப் படையைச் சேர்ந்தவராக இருந்தால் உங்களால் இவ்வளவு செம்மையாகத் தமிழில் உரையாட முடியாது. அப்படியே உரையாடக் கற்றிருந்தாலும் சாதுரியமும் நயங்களும் அந்த உரையாடலில் இருக்க இயலாது. ஒரு மொழியை அவசியத்துக்காக யார் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் நயங்களையும், சமத்காரங்களையும் உண்டாக்கி அணி நலம்பட எழுதவோ பேசவோ அதைத் தாய் மொழியாகக் கொண்டவனால்தான் முடியும்.”

“ஆகா என்ன சாதனை? இவ்வளவு நேரம் சிரமப்பட்டு நான் களப்பிரன் அல்லன், தமிழன்தான் என்பதைக் கண்டு பிடித்து விட்டாய்...”

“ஏளனம் வேண்டாம். உங்களிடம் இன்னும் என்னென்ன கண்டுபிடித்திருக்கிறேன் என்பதைச் சமயம் வரும்போது பேசலாம். நன்றாக இருட்டுவதற்குள் நீங்கள் பெரியவரைக் காணச் செல்ல வேண்டும். இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம், நம்மவர்கள் தங்களை இனம் கண்டு கொள்வதற்காகச் சந்தித்தவுடன் சொல்லிக் கொள்ளும் நல்லடையாளச் சொல்லை இன்னும் நீங்கள் கூறவில்லை.”

“அதென்ன நல்லடையாளச் சொல்?”

“அதைச் சொல்வதற்காகவே உங்களைச் சத்தியம் செய்யச் சொன்னேன். மதுராபதி வித்தகரின் ஆதரவாளர்கள் சந்தித்துக் கொள்ளும்போது ‘கயல்’ என்று சொல்லிக் கொள்ள வேண்டும். நீங்கள் அந்நியர் என்று சந்தேகப் பட்டால் உங்களிடமிருந்து முதலில் அந்த வார்த்தை வருகிறதா என்பதைத்தான் மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்களிடமிருந்து அந்த நல்லடையாளச் சொல் கிடைக்கா விட்டால் அவர்கள் பின்பு வாய்திறப்பது அரிது. ‘கயல்’ என்ற சொல்லால் தான் இங்கே வழிகளையும் கதவுகளையும் பிறர் வாய்களையும் திறக்கச் செய்யமுடியும். இது நன்றாக நினைவிருக்கட்டும்.”

அவள் இவ்வாறு கூறியதும் சற்று முன் அந்தக் கரும் பொற்கொல்லன், ‘சொல்ல வேண்டிய வார்த்தையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/20&oldid=714908" இலிருந்து மீள்விக்கப்பட்டது