பக்கம்:நித்திலவல்லி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

நித்திலவல்லி / முதல் பாகம்



தான் முயல்வதாக அவன் புரிந்து விடக் கூடாதே என்று தயங்கவும் செய்தான் இளையநம்பி.

“நீ அன்று திருமோகூரில் நான் முதல் முதலாக நுழைந்த தினத்தன்று என்னிடமிருந்து நல்லடையாளச் சொல் கிடைக்காத வரை எனக்கு வழி கூறாமலிருந்த பிடிவாதத்தை நான் பாராட்டுகிறேன். கட்டுப்பாடும், உறுதியும்தான் இன்று நமக்கு வேண்டும். இனிய வார்த்தைகளைக் கேட்டு மனம் நெகிழ்கிறவனை நண்பனும் நெகிழச் செய்யமுடியும். பகைவனும் நெகிழச் செய்து விட முடியும். நீ அப்படி நெகிழாதவனாக இருந்ததை நான் வரவேற்கிறேன்"-- என்று அந்தக் கொல்லன் தன்னுடைய முன்வார்த்தைகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாமலிருப்பதற்காக இளையநம்பி மேலும் தொடர்ந்து அவனோடு பேசினான். ஆனால் அவனோ மிகமிக விநயம் தெரிந்தவனாக இருந்தான். அவன் பணிவாகப் பேசினான்:-

“ஐயா! எப்படி இருந்தாலும் அன்று தங்களுக்கு மறுமொழி கூறாததற்காகத் தாங்கள் எளியேனைப் பொறுத்தருள வேண்டும். இரும்போடு பழகிப் பழகிப் பல வேளைகளில் என் மனமும் இரும்பாகி விடுகிறது.”

“அப்படி இருப்பதை நான் வரவேற்கிறேன். ஒவ்வொருவர் மனமும் இரும்பாக இல்லையே என்பதுதான் இப்போது என் வருத்தம். இரும்பைப் போல் உறுதியான மனம் நம்மவர்கள் எல்லோருக்கும் இருந்தால் என்றோ களப்பிரர்களை இந்த நாட்டிலிருந்து நாம் துரத்தியிருக்கலாம்...”

-என்று இளையநம்பி கூறிய மறுமொழி கொல்லனின் முகத்தை மலரச் செய்தது. சிறிது நேர்த்தில் அந்தக் கரும்பொற்கொல்லன் எப்போது வந்தான், என்ன காரியமாக வந்தான் என்பதையெல்லாம் இளையநம்பி அழகன் பெருமாளிடம் வினாவினான்.

“நேற்று முன்தினம் இரவில் தேனூர் மாந்திரீகன் வந்தது போல்தான், இவனும் நிலவறை வழியாகப் பின்னிரவில் நேற்று இங்கே வந்தான். நாம் கலந்து பேசவும் திட்டமிடவும் நிறையச் செய்திகள் இருக்கின்றன. நீங்கள் உறங்கி எழுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/201&oldid=945276" இலிருந்து மீள்விக்கப்பட்டது