பக்கம்:நித்திலவல்லி.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
202
நித்திலவல்லி / முதல் பாகம்
 


இருப்பதை எண்ணி அவன் உள்ளம் வருந்தியது. ஈர உடையோடு கண்களை மூடி, தியானித்து இறையனார் நினைவுடனே வழிபட்டு விழிகளைத் திறந்து கண்டால், எதிரே அவன் அணியவேண்டிய மாற்றுடைகளோடு இரத்தினமாலை நின்றாள்.

“ஒரு பெண்ணின் காதலால் எவ்வளவு கெடுதல் பார்த்தாயா இரத்தினமாலை? விழித்துக் கொள்ளவேண்டிய நேரத்தில் உறங்கிப் போய் விடுகிறோம்...”

“உறங்க வேண்டிய நேரத்தில் உறங்காவிட்டால், விழித்துக் கொள்ள வேண்டிய நேரத்தில் விழித்துக் கொள்ள முடியாதுதான்.”

“அப்படியா? தயை செய்து அதற்கு யார் காரணமென்று இப்படி என் முகத்தைச் சற்றே நிமிர்ந்து பார்த்து மறுமொழி சொல்லேன் பார்க்கலாம்! உறங்க வேண்டிய நேரத்தையும், விழிக்க வேண்டிய நேரத்தையும் மாற்றிய குற்றத்துக்குக் காரணம் யாரோ?”

இதைக் கேட்டு நாணிச் சிவக்கும் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு ஓடி விட்டாள் அவள். இந்தப் புதிய வெட்கம், இந்தப் புதிய வேற்றுமை எல்லாம் அவனுக்கு வியப்பைத் தந்தது. உடை மாற்றிக் கொண்டு அவன் கூடத்துக்கு வந்தபோது அங்கே அழகன் பெருமாள், திருமோகூர்க் கொல்லன், கட்டிலில் அமர்ந்தபடியே தேனூர் மாந்திரீகன், இரத்தினமாலை எல்லாரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளையநம்பி வந்ததும் அவர்கள் பேச்சுத் தணிந்து ஓய்ந்தது. திருமோகூர்க் கொல்லனைப் பார்த்து இளையநம்பி கேட்டான்.

“நீ உப வனத்து முனை வழியேதான் நிலவறையில் நுழைந்து வந்திருப்பாய் என்று எண்ணுகிறேன். உப வனத்து நிலைமை எப்படி இருக்கிறது? களப்பிரர்கள் அதைக் கடுமையாகக் கண்காணிக்கிறார்களா?”

“அடியேன் முன் வாயில் வழியே நேராக உப வனத்தில் நுழைந்து வரவில்லை. இருளோடு இருளாக வையையில்