பக்கம்:நித்திலவல்லி.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
204
நித்திலவல்லி / முதல் பாகம்
 


கேட்டவுடன் அந்தக் கொல்லன், தன் கையோடு கொண்டு வந்திருந்த தாழை ஓலையால் நெய்து மூடியும் இட்ட ஓலைக் குடலையை எடுத்துத் திறந்தான். அடுத்த சில கணங்களில், சிறிய ஓலைச் சுவடி ஒன்றைப் பத்திரமாக எடுத்து இளைய நம்பியிடம் கொடுத்தான் அவன். இளையநம்பி அதை வாங்கினான்.

அப்படிக் கொடுப்பதற்காகக் குடலையிலிருந்து சுவடியை எடுத்த போது, கையோடு வந்த மற்றோர் ஓலையை மறுபடியும் குடலையிலேயே இட்டு மூடிவிட்ட அவன் செயலை இளையநம்பி கண்டான்.

“அது என்ன ஓலை நண்பனே? என்னைத் தவிர வேறெவர்க்கும் கூட நீ ஓலை கொண்டு வந்திருக்கிறாயா?”

“.............. ?”

அந்தக் கொல்லன் மறுமொழி சொல்லத் தயங்கினான். விடாமல் மீண்டும் இளையநம்பி அவனை துளைத்தெடுப்பது போல் கேட்கவே, அவன் பதிலளிக்க வேண்டியதாயிற்று.

“ஐயா! இதுவும் தங்களிடம் சேர்க்கப்பட வேண்டியதுதான். ஆனால்.... அவ்வளவிற்கு முதன்மையானதல்ல... தாங்கள் அந்த ஓலையை முதலில் படிக்கவேண்டும் என்பது அவ்விடத்து விருப்பம்...”

சற்றே தாமதமாகத் தன்னிடம் சேர்க்கப்படுவதற்கு இன்னோர் ஓலையும் இருக்கிறது என்று தெரிந்ததும், அதைப் பற்றிய ஆவலுடன் விரைந்து இதைப் பிரித்தான் இளையநம்பி. சுவடியின் ஒவ்வோர் ஓலையிலும் நல்லடையாளச் சொல் பொறிக்கப்பட்டிருந்தது.

பெரியவர் மதுராபதி வித்தகர் திருமோகூரில் இல்லை என்ற அந்துவனின் ஓலைச் செய்தி நினைவு வரவே, தன் கையிலிருந்த ஓலையைப் படிக்கு முன்,

“இப்போது நீ எங்கிருந்து வருகிறாய்?"--என்று கொல்லனைக் கேட்டான் இளையநம்பி.