பக்கம்:நித்திலவல்லி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

205


“நான் எங்கிருந்து வருகிறேனோ அங்கிருந்து ஓலையும் வரவேண்டும் என்பதாக அனுமானித்துக் கொள்ள முடியாது” -என்றான் அவன். இளையநம்பிக்கு முதலில் அது புரிய வில்லை. ஆனால் அந்த ஓலையைப் படிக்கத் தொடங்கியதும் அவன் கூறிய மறுமொழியின் பொருள் புரியலாயிற்று.


36. பெரியவர் பேசுகிறார்

‘திருக்கானப்பேர் பாண்டிய குல விழுப்பரையர் தவப்பேரன் இளையநம்பி காணவிடுக்கும் ஓலை. இந்த ஓலையை நான் எங்கிருந்து எழுதுகிறேன் என்பதைவிட எதற்காக எழுதுகிறேன் என்பதையே இதைப் படிக்கத் தொடங்கும்போது நீ சிந்திக்க வேண்டும். இவ்வோலை உன்னை நலனோடும் திடனோடும் கூடிய நிலையில் காண வாழ்த்துகிறேன். பல நாட்களுக்கு முன்பாக யான் அந்துவன் மூலம் உனக்கு அறிவிக்கச் சொல்லியிருந்த மூன்று குறிப்புகள் இதற்குள் உனக்கு அறிவிக்கப்பட்டனவா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. களப்பிரர்களின் கொடுமை அதிகரிப்பதால் அகநகருக்கும் நமக்கும் தொடர்புகள் பெரும்பாலும் அற்றுவிட்டன. எதுவும் தெரியவில்லை. எதையும் தெரிவிக்கவும் முடியவில்லை. சிற்றூர்கள் தோறும் தங்கள் எதிரிகளைத் தேடிக் கருவறுக்கக் களப்பிரர்கள் பூதபயங்கரப் படையை ஏவியிருக்கிறார்கள். முறையோ, நியாயமோ, நீதியோ இன்றிச் சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவும், சிறைப் பிடிக்கவும் செய்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நம்மைச் சேர்ந்தவர்களில் மிகவும் சாதுரியமுள்ளவனும், உடல் வலிமை மிக்கவனும் ஆகிய திருமோகூர்க் கரும்பொற்கொல்லன் மூலமாக இந்த ஓலையை உனக்குக் கொடுத்துவிட எண்ணியுள்ளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/206&oldid=715385" இலிருந்து மீள்விக்கப்பட்டது