பக்கம்:நித்திலவல்லி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

213



கைகளால் காராளர் வீட்டில் எவ்வளவோ நாட்கள் நான் வயிறார உண்டிருக்கிறேன் ஐயா! அவள் கண்களில் நீரைப் பார்த்ததும் என் மனம் இளகிவிட்டது. அவளுடைய வேண்டுகோளை நான் மறுத்துச் சொல்ல முடியவில்லை. அவள் கொடுத்த ஓலையையும், நான் வாங்கிக் கொண்டேன். பெரியவர் கொடுத்த ஓலை, நீங்கள், நான், காராளர், அழகன்பெருமாள் எல்லாரும் அறிந்தது. எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் இந்த ஓலை இதை எழுதியவரைத் தவிர நீங்கள் மட்டுமே அறியப்போவது. உங்களுக்கு மட்டுமே உரியது.”

சிரித்துக் கொண்டே பட்டுக் கயிறு இட்டுக் கட்டிய அந்த இரண்டாவது ஓலையை எடுத்து இளைய நம்பியிடம் நீட்டினான் அவன்.

“இவ்வளவு அரிய முயற்சிகளும், செய்திகளும் அடங்கிய ஓலையையா, ‘அவ்வளவிற்கு முதன்மையானதல்ல’ என்று தொடக்கத்தில் என்னிடம் கூறினாய் நீ?” என்று வினாவியபடி, கொல்லன் கொடுத்த ஓலையை வாங்கினான் இளையநம்பி. திருமோகூர்க் கொல்லனும் தயங்காமல் உடனே அதற்கு மறுமொழி கூறினான்:-

“தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ஐயா! ஒரு காரணத்துக்காகத் தங்கள் நன்மையையும், பெரிய காராளரின் மகளுடைய நன்மையையும் நினைத்தே நான் முதலில் எல்லார் முன்னிலையிலும் அப்படிச் சொல்லியிருந்தேன். சுற்றி நின்று கொண்டிருந்த மற்றவர்கள் கவனம், ‘இந்த இரண்டாவது ஓலை என்னவாக இருக்கும்?’ என்று இதன் பக்கம் திரும்பக் கூடாது என்பதற்காகவே, ‘அவ்வளவிற்கு இது முதன்மையானது அல்ல’ என்று எல்லாரும் கேட்கக் கூறியிருந்தேன். மற்றவர்கள் கவனம் எல்லாம் உங்களிடம் நான் முதலில் படிக்கக் கொடுத்த பெரியவரின் கட்டளை ஓலையைப் பற்றியதாக மட்டுமே இருக்கட்டும் என்பதற்காக நான் இந்தத் தந்திரத்தைச் செய்தேன். இதற்காக நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்குப் பதிலாக நீங்களே குறை சொல்கிறீர்களே ஐயா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/214&oldid=945270" இலிருந்து மீள்விக்கப்பட்டது