பக்கம்:நித்திலவல்லி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

நித்திலவல்லி / முதல் பாகம்


“உன் துணிவைப் பாராட்டுகிறேன்” என்று அவனுக்கு மறுமொழி கூறிவிட்டு அந்த ஓலையைப் படிப்பதற்காகப் பிரிக்கலானான் இளையநம்பி. அவன் அதைப் படிப்பதற்கான தனிமையை அவனுக்கு அளிக்க வேண்டும் என்கிற நாகரிகத்தைத் தனக்குத்தானே குறிப்புணர்ந்து புரிந்து கொண்டவனாகத் திருமோகூர்க் கொல்லன் அந்தப் பகுதியிலிருந்து விலகி வந்து வெளியே நின்ற குறளனோடு சேர்த்து நின்று கொண்டான். அவன் இவ்வாறு செய்ததை இளையநம்பி உள்ளூறப் பாராட்டினான்.


38. மனமும் நறுமணங்களும்

அப்பகுதியில் சந்தனக் கல்லின் மேல் குறளன் அறைத்துக் குவித்திருந்த சந்தனத்தின் வாசனையையும், திருமோகூர்ப் பெரிய காராளர் மகள் செல்வப்பூங்கோதை தன் ஓலையை பிறர் அறியாமல் பாதுகாக்க, அவள் தன் மஞ்சத்தில் தலையணையில் வைத்துப் பாதுகாத்ததாலோ என்னவோ அவள் கூந்தலின் நறுமண வசீகரங்களின் வாசனையுமாக நுகர்ந்து கொண்டே அந்த ஓலையைப் படிக்கலானான் இளையநம்பி. பள்ளி எழுந்து நீராடி வந்த உற்சாகமும், காலை நேரத்தின் உல்லாசமும், அறையின் நறுமணமும், கைக்கு வந்திருந்த ஓலையின் சுகந்தமும் அவனை மயக்கிக் கொண்டிருந்தன. அந்தக் கணங்களில் எல்லாக் கவலைகளையும் மறந்து மிகமிக மகிழ்ச்சியாயிருந்தான் அவன். அவனைச் சூழ்ந்திருந்த நறுமணங்கள் அவன் மனத்தையும் குதூகலம் கொள்ள வைத்திருந்தன.

அவள் தன் ஓலையை இணைத்துக் கட்டியிருந்த பட்டுக் கயிறும் மணந்தது. அந்தப் பட்டுக்கயிற்றை எடுத்துப் பார்த்த போது அது பெண்கள் தங்கள் கூந்தலை முடிந்து கட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/217&oldid=715388" இலிருந்து மீள்விக்கப்பட்டது