பக்கம்:நித்திலவல்லி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

217



வகைளைச் சேர்ந்த பட்டுக் கயிறாக இருப்பதைக் கண்டு அவன் மனத்துக்குள் நகைத்துக் கொண்டான்.

அன்று காலையில் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டிக் கொண்டிருந்த இரத்தினமாலையின் அருகேயும் அப்படி ஒரு பட்டுக் கயிறு கிடந்ததும் நினைவு வந்தது அவனுக்கு.

ஓலையின் வாசகங்களைப் படிக்குமுன் அந்தக் கூந்தல் பட்டுக் கயிற்றின், மனத்தைக் கிறங்கச் செய்யும் நறுமணங்களை நாசியருகே உணர்ந்தான் அவன்.

முன்பு எப்போதோ தன்னோடு கற்ற ஒரு சாலை மாணவனாகிய திருக்கானப்பேர்ப் பித்தன் பாடிய ஒரு பாடல் இப்போது இளையநம்பிக்கு நினைவு வந்தது. பூக்களைப் பார்த்து ஓர் இளம் பருவத்துக் கவி கேட்பது போல் அமைந்திருந்தது, அந்தப் பாடலின் கருத்து. மிக அழகிய அந்தக் கற்பனையை நினைத்தான் அவன்.

“காலையில் மலர்ந்து மாலையில் வாடும் இவ்வுலகின் பூக்களே! உங்களில் யாருக்கு வாசனையும், தோற்றப் பொலிவும் அதிகம் என்று நீங்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டுப் பயனில்லை! உங்களில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவிதமான வாசனையும், ஒருவிதமான தோற்றப் பொலிவும்தான் உண்டு. ஆனால் உங்களில் அனைவரின் வாசனைகளும், அனைவரின் தோற்றப் பொலிவும் ஒரே வடிவத்திற் சேர்ந்தே அமைந்திருக்குமானால், அந்த வடிவத்திற்கு நீங்கள் அனைவரும் தோற்றுப் போக வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு வடிவத்தைப் பற்றி இன்று எனக்குத் தெரியும்.

உங்களில் மல்லிகைப் பூவுக்கு மல்லிகையின் வாசனை மட்டும் தான் உண்டு. தாழம்பூவுக்குத் தாழம்பூவின் வாசனை தான் உண்டு. சண்பகப் பூவுக்குச் சண்பகப் பூவின் வாசனை தான் உண்டு. பித்திகைப் பூவுக்கு அந்த வாசனை மட்டும்தான் உண்டு. நான் காதலிக்கும் பெண்ணின் கூந்தலிலோ, அத்தனை பூக்களின் வாசனையையும் ஒரு சேர நுகர முடிகிறது. அவளுடைய தோற்றத்திலோ அத்தனை பூக்களின் பொலிவையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/218&oldid=945263" இலிருந்து மீள்விக்கப்பட்டது