பக்கம்:நித்திலவல்லி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

நித்திலவல்லி / முதல் பாகம்


ஒருசேரக் காண முடிகிறது. அவளோ முகத்தைத் தாமரைப் பூவாகவும், கண்களைக் குவளைப் பூக்களாகவும், இதழைச் செம்முருக்கம் பூவாகவும், நாசியை எட்பூவாகவும், கைவிரல்களைக் காந்தள்பூக்களாவும் காட்டி, ஆயிரம் பூக்களின் அழகும் ஒன்று சேர்ந்த ஒரு பெரும் பூவாக வந்து என்னைக் கவருகிறாள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணின் வடிவிலும், வாசனைகளிலும் தோற்றுப் போய் மானம் இழந்த வேதனை தாங்காமல் அல்லவா, நீங்கள் ஒவ்வொரு பெண்ணின் கூந்தலிலும் வாழை நாரினால் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கி வாடுகிறீர்கள்?

உங்களில் சில மலர்கள் பெண்களில் கை பட்டாலே மலர்ந்து விடும் என்று இலக்கியங்கள் சொல்கின்றன. உங்களை விட அழகும் மணமும் உள்ளவர்கள் உங்களைத் தொடப் போகிறார்களே என்று கூசி நாணி நீங்கள் தோற்பதைத்தானே அது காட்டுகிறது?’ என்று இளமையில் திருக்கானப்பேர்ப் பித்தன் காதல் மயக்கத்தில் அழகாகக் கற்பனை செய்திருக்கும் ஒரு கவிதையின் கருத்தை இளையநம்பி இப்போது நினைவு கூர்ந்தான்.

அவள் அனுப்பியிருந்த அந்தக் கற்றையில், மூன்று ஓலைகள் சுவடி போல் இணைக்கப்பட்டிருந்தன. எழுத்துக்கள் ஓலையில் முத்து முத்தாகப் பதிந்திருந்த காரணத்தால், ஏட்டில் எழுதும் வழக்கமும், பயிற்சியும் அவளுக்கு நிறைய இருக்க வேண்டும் என்று அவனால் உய்த்துணர்ந்து கொள்ள முடிந்தது. அவனுக்கு அவள் தீட்டிய மடல் பணிவாகத் தொடங்கியது.

‘திருக்கானப்பேர் நம்பியின் திருவடிகளில் தெண்டனிட்டு வணங்கி, அடியாள் செல்வப் பூங்கோதை வரையும் இந்த மடல் தங்களை நலத்தோடும் உறவோடும் காணட்டும்.

ஒருவேளை இந்தப் பேதையைத் தாங்கள் தங்களுடைய பல்வேறு அரச கருமங்களுக்கு நடுவே மறந்து போயிருந்தாலும் இருக்கலாம். நினைப்பதும், மறப்பதும் ஆண்களுக்குச் சுலபமான காரியங்கள். என்னைப் போல பேதைப் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/219&oldid=945264" இலிருந்து மீள்விக்கப்பட்டது