பக்கம்:நித்திலவல்லி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

219



களுக்கு ஒன்றை நம்பிக்கையோடு நினைத்து விட்டால், அப்புறம் மறக்க முடிவதில்லை. எங்களை அறவே மறந்து போய் விடுகிறவர்களைக் கூட நாங்கள் மறக்க முடிவதில்லை. இதனால் எல்லாம்தான் பெண்களாகிய எங்களைப் பேதைகள் என்று சொல்லியிருக்கிறார்களோ என்னவோ?

மதுரை மாநகரில் தங்களைக் கொண்டு வந்து விட்டு விட்டுத் திரும்பிய நாளிலிருந்து இந்தப் பேதைக்கு ஒவ்வொரு கணமும் உங்கள் நினைவுதான். என்னிடம் நேர்ந்து வரும் சுபாவ மாறுதல்களை இப்போது என் தாய் கூடக் கவனித்து என்னை வினவுகிற அளவு, உங்கள் ஞாபகம் என்னைப் பித்துப் பிடித்தவள் போல் ஆக்கி விட்டது. ‘பூப்போல் பொதிந்து கொண்டு செல்வது’ என்று வசனம் சொல்லுவார்கள். நாங்களோ உங்களைப் பூக்களிலேயே பொதிந்து கொண்டு போய்க் கோநகருக்குள் சேர்த்தோம்.

உங்களை இருந்த வளமுடையார் கோயில் நந்தவனத்தில் விட்டுவிட்டு ஆலய வழிபாட்டை முடித்துக் கொண்டு நானும் என் தாயும் திரும்புகிற வழியில் பூத பயங்கரப் படையினர் யாரையோ ஒற்றன் என்று சிறைப்பிடித்துச் செல்வதை வழியிலேயே கண்டோம். அந்த வினாடி முதல் உங்கள் நலனுக்காக நான் வேண்டிக் கொள்ளாத தெய்வங்கள் இல்லை. இங்கு எங்கள் வீட்டிற்கு நீங்கள் விருந்துண்ண வந்தபோது, என் தந்தையிடம் ‘இந்த வட்டாரத்தில் உங்கள் மகள் வேண்டிக் கொள்ளாத தெய்வங்களே மீதமிருக்க முடியாது போலிருக்கிறதே’ என்று குறும்பாகச் சிரித்தபடியே வினாவியிருந்தீர்கள்.

அப்படி நான் தெய்வங்களை எல்லாம் வேண்டியது அன்று எப்படியோ? இன்று மெய்யாகவும் கண் கூடாகவும் ஆகியிருக்கிறது. கோநகருக்குள் களப்பிரர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் உங்களைக் காக்க வேண்டும் என்று இப்போது நான் எல்லாத் தெய்வங்களையும் எப்போதும் வேண்டிய வண்ணமிருக்கிறேன். ஏற்கெனவே நான் கொற்றவை கோவிலுக்கு நெய் விளக்குப் போடத் தொடங்கியதை ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/220&oldid=945265" இலிருந்து மீள்விக்கப்பட்டது