பக்கம்:நித்திலவல்லி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

நித்திலவல்லி / முதல் பாகம்



மண்டலம் முடிந்த பின்பும் நிறுத்தவில்லை. உங்களுக்காக வேண்டிக் கொண்டு தொடர்ந்து விளக்கேற்றிக் கொண்டு வருகிறேன்.

மாலை மயங்கிய வேளையில் திருமோகூர் வீதியில் நான் கொற்றவை கோயிலுக்கு விளக்கேற்றச் சென்று கொண்டிருந்த போதுதான் நீங்கள் என்னைச் சந்தித்து வழி கேட்டீர்கள்! ‘உங்களிடமிருந்து நல்லடையாளச் சொல் கிடைக்கவில்லையே, உங்களுக்கு என்ன மறுமொழி சொல்லுவது!’ என்று நான் மறுமொழி கூறத் தயங்கிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே,

‘அழகிய பெண்களும் ஊமைகளாக இருப்பது மோகூரில் வழக்கம் போலிருக்கிறது’ என்று என் வாயைப் பேசத் தூண்டினீர்கள். அன்று நான் ஊமையாயில்லை. உடனே துடிப்புடன் உங்களுக்கு விரைந்து கடுமையான சொற்களால் மறுமொழி கூறினேன். ஆனால் என் அந்தரங்கத்தைப் பேசுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் யாருமில்லாத காரணத்தால் இன்று, இப்போதுதான் ஏறக்குறைய நான் ஊமையைப் போலாகி விட்டேன். என்னை இப்படி ஆக்கியது யார் தெரியுமா? நீங்கள்தான்!

இந்த மடலை உங்களுக்காக வரையும்போது என் ஏக்கத்தின் அளவைச் சொற்களால் உணர்த்த முடியாது. இந்த ஊரில் என் பருவத்துக்குச் சமவயதுள்ள தோழிகளிடம் பேசிப் பழகிக் கொண்டிருந்த நான், இப்பொழுதெல்லாம் அவர்களோடு பேசுவதற்கு எதுவுமே இல்லாதது போல் ஆகிவிட்டது. யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. எனக்கு நானே சிந்தித்து மாய்ந்து கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் கண்களில் நீர் நெகிழப் பிரமை பிடித்தாற் போல் அப்படியே அமர்ந்து விடுகிறேன். என் கைகள் மெலிந்து வளைகள் கழன்று போய்ச் சோர்கின்றன. தோள்களும் மெலிந்து விட்டன. நான் இப்படி எல்லாம் வேதனைப் படுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் என்னை நினைக்கிறீர்களா? என் வேதனைகளைப் புரிந்து கொள்கிறீர்களா? என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/221&oldid=945266" இலிருந்து மீள்விக்கப்பட்டது